ஓசூர்: “நடிகர் கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து கூறியதை, பாஜக திட்டமிட்டு இரு மாநில பிரச்சனையாக மாற்றி உள்ளது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கன்னட மக்களுக்கு கன்னட மொழி சிறந்தது என சொல்லிக்கொள்வதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை. கன்னட மக்கள் அவர்களது மொழியை வளர்ப்பதற்காகவும் மற்றும் பெருமை பேசிக்கொள்வதற்கும், அவர்களுக்கு எந்த தடையும் இல்லை.
நடிகர் கமலஹாசன் மொழியியல் வல்லுநர் இல்லை. ஏற்கெனவே வல்லுநனர்கள் கூறிய கருத்தைத்தான் அவர் தனது கருத்தாக தெரிவித்துள்ளார். இதற்கு உடன்பாடு இல்லை என்றால், கருத்தை கருத்தாக எதிர்கொள்வதற்கு பதிலாக, கர்நாடகாவில் வன்முறையை கட்டவிழ்த்து விடுவது, இரு மாநில பிரச்சினையாக மாற்றுவது என்பது பாஜகவின் அரசியல் உள்நோக்கம் கொண்ட திட்டமிட்ட நடவடிக்கை. அவை முற்றிலும் தடுக்கப்பட வேண்டும்” என கூறினார்.
முன்னதாக, ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேசுகையில், “கன்னட நடிகர் ராஜ் குமாருடைய குடும்பம் அந்த ஊரில் (கர்நாடகாவில்) இருக்கும் என்னுடைய குடும்பம். தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம். அதனை நீங்களும் (சிவராஜ்குமார்) ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறேன்” என தெரிவித்தார்.
இதையடுத்து, கன்னட மொழி குறித்த நடிகர் கமல்ஹாசனின் கருத்துக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவர் மன்னிப்பு கேட்காவிடில் ‘தக் லைஃப்’ படத்துக்கு தடை விதிக்கப்படும் என அம்மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி எச்சரிக்கை விடுத்தது கவனிக்கத்தக்கது.