சென்னை: “கமல்ஹாசனின் நடுநிலையான பேச்சு, உங்களைப் போன்ற என்டெர்டெய்னர்களுக்கு புரியாது” என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது மநீம மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உடல் மொழியால் போலிப் பணிவும், நரம்பில்லாத நாக்கால் தடித்த வார்த்தைகளை தரம் பார்க்காமல் எல்லோர் மீதும் கொட்டுவதும் வழக்கமாக கொண்ட பிஜேபியாலேயே புறக்கணிக்கப்பட்ட அண்ணாமலை இன்று எங்கள் தலைவரைப் பற்றி, ஒரு நாடாளுமன்ற சீட்டுக்காக தன் ஆன்மாவை விற்றுவிட்டவர் என்று கூறியுள்ளார்.
ஆட்களையும், கட்சிகளையும் விலைக்கு வாங்கும் பழக்கமுள்ள பாஜகவும், அந்தக் கட்சியால் காவல் துறையில் இருந்து அரசியலுக்கு விலைக்கு வாங்கப்பட்ட அண்ணாமலையும் இப்படி பேசுவது ஆச்சரியமில்லை. உலகம் புகழும் மாபெரும் கலைஞர், இந்திய அரசின் வருமானத் துறையாலேயே நேர்மையாளர் பட்டம் பெற்றவர், 7 ஆண்டுகள் மய்யம் என்ற புதிய சித்தாந்ததோடு கட்சி நடத்தி வருபவர், பல்துறை வித்தகர் எங்கள் தலைவர் கமல்ஹாசன்.
அவர் ஏற்றுக்கொண்டதால் அந்த எம்.பி பதவி தான் கவுரவம் பெற்றதேயோழிய அவர் தகுதிக்கு இந்தப் பதவி சாதாரணம். மக்கள் பிரச்சினைகளை உரிய இடத்தில் பேச ஒரு வாய்ப்பாக எம்.பி பதவியை எங்கள் தலைவர் கமல் பார்க்கிறாரே தவிர அதை தனக்கான கிரீடமாக பார்க்க வில்லை. அவர் எந்தவொரு பதவியில் இல்லாவிட்டாலும், அவர் குரலை இந்தியா திரும்பிப் பார்க்கும் உங்கள் தலைவர்கள் உட்பட. ஆனால், உம்முடைய குரல் வெறும் ஊடகத் தீனிதான் என்பதை நீங்கள் உணர வேண்டும், அண்ணாமலை.
நடந்த சோக நிகழ்வுக்கு யார் பொறுப்பு என்று ஊடகம் கேட்கும்போது நாம் எல்லோரும்தான் பொறுப்பு என்று கூறியவர் எங்கள் தலைவர் கமல். அவரின் நடுநிலையான பேச்சு உங்களைப் போன்ற என்டெர்டெய்னர்களுக்கு புரியாது என்று கூறிக்கொள்கிறேன்” என்று முரளி அப்பாஸ் கூறியுள்ளார்.
அண்ணாமலை கூறியது என்ன? – முன்னதாக, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, “கரூருக்குச் செல்ல நேரம் கிடைத்து, அங்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்றிருப்பது உள்ளபடியே எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அங்கு அரசு திறம்பட செயலாற்றியது, அரசு மீது தவறில்லை, காவல் துறையை கடமையைச் செய்தது, அந்த நடிகர் தவறு செய்துவிட்டார் என்றபடியெல்லாம் பேசியிருக்கிறார்.
கமல்ஹாசன் நீண்ட காலத்துக்கு முன்பே ராஜ்யசபா சீட்டுக்காக தன் ஆன்மாவை விற்றுவிட்டார். அவர் என்ன பேசினாலும் தமிழக மக்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அவருக்கு கரூர் சென்று பேசுவதற்கு அனைத்து உரிமையும் இருக்கிறது. ஆனால், அரசு நிர்வாகத்தின் மீது தவறில்லை என அவர் சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.
அரசு நிர்வாகத்தின் மீது தவறு இருக்கிறது என பாதிக்கப்பட்டோர் உள்ளிட்ட அனைவருக்கும் தெரியும். இந்த விவகாரத்தில் அச்சம் கொண்டுள்ள திமுக, நாளுக்கு நாள் புதிய நபர்களை அனுப்பி, மக்களின் கவனத்தை திசை திருப்பி வருகிறது. கமல்ஹாசன் ஒரு நல்ல நடிகர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதே நேரம், அரசியலைப் பொருத்தவரை அவர் ஒரு தலைபட்சமாக திமுகவுக்கு ஆதரவாக பேசுகிறார். கரூர் சம்பவத்தில் கூட அவர் திமுகவை தான் ஆதரிக்கிறார்” என்று அண்ணாமலை கூறியது கவனிக்கத்தக்கது.