விருதுநகர்: “கர்நாடகாவில் கமலுக்கு எதிராக கன்னட அமைப்புகள் போராடும்போது, தமிழகத்தில் அவருக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்காதது ஏன்?” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
விருதுநகரில் இன்று (மே 29) நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற சீமான் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. கமல்ஹாசன் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள், அதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்.
கர்நாடகாவில் கமலுக்கு எதிராக கன்னட அமைப்புகள் போராடும்போது, தமிழகத்தில் அவருக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்காதது ஏன்? தமிழக முதல்வராக இருந்துகொண்டு, கர்நாடக தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த ஸ்டாலின், கர்நாடகாவுக்கு எதிராக எப்படி கருத்து கூறுவார்” என்று கூறினார்.
முன்னதாக, இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ் குமார் பங்கேற்றார். விழாவில் கமல்ஹாசன் பேசுகையில், “கன்னட நடிகர் ராஜ் குமாருடைய குடும்பம் அந்த ஊரில் (கர்நாடகாவில்) இருக்கும் என்னுடைய குடும்பம். தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம். அதனை நீங்களும் (சிவராஜ்குமார்) ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறேன்” என தெரிவித்தார்.
இதையடுத்து, கன்னட மொழி குறித்த நடிகர் கமல்ஹாசனின் கருத்துக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவர் மன்னிப்பு கேட்காவிடில் ‘தக் லைஃப்’ படத்துக்கு தடை விதிக்கப்படும் என அம்மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி எச்சரிக்கை விடுத்தது கவனிக்கத்தக்கது.