தூத்துக்குடி: கப்பல் கட்டும் துறையில் 2030-ம் ஆண்டில் உலகில் சிறந்த 10 நாடுகளுக்குள் இந்தியா இடம் பிடிக்கும் என்று மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் கூறினார். தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் மொத்தம் ரூ.303 கோடியில் பசுமை ஹைட்ரஜன் முன்னோடி ஆலை தொடக்க விழா மற்றும் பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.
துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் தலைமை வகித்தார். தமிழக அமைச்சர் பி.கீதாஜீவன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலை வகித்தனர். மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கிவைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பேசினார். விழாவில், மத்திய துறைமுகங்கள் துறைச் செயலர் டி.கே.ராமச்சந்திரன், சிறப்புச் செயலர் ராஜேஷ் குமார் சின்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் பேசியதாவது: கடந்த 11 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள 3 பெரிய துறைமுகங்களுக்கு சாகர் மாலா திட்டத்தின் கீழ் ரூ,93,715 கோடியிலான 98 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 50 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுதவிர 3 துறைமுகங்களை நவீனப்படுத்த 11 ஆண்டுகளில் ரூ.16 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி வஉசி துறைமுகம் சூரிய மின்சக்தி, காற்றாலைத் திட்டங்கள் மூலம் பசுமை துறைமுகமாக மாறியுள்ளது. நாட்டில் 3 துறைமுகங்கள் பசுமை ஹைட்ரஜன் மையமாக அறிவிக்கப்பட்டன. அதில் தூத்துக்குடியும் ஒன்றாகும்.
தூத்துக்குடி துறைமுகத்தை பசுமை ஹைட்ரஜன் மையமாக மாற்றும் திட்டத்தின் முன்னோடியாக, நாட்டிலேயே முதல் துறைமுகமாக தூத்துக்குடியில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி முன்னோடி ஆலை திறக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாட்டிலேயே முதலாவதாக தூத்துக்குடி துறைமுகத்தில் பசுமை மெத்தனால் சேமிப்பு மற்றும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. மேலும், தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்கப்பட உள்ளது.
இதற்காக தமிழக அரசின் சிப்காட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கப்பல் கட்டும் தளம் திட்டம் தொடர்பாக மத்திய மாநில அரசுகளின் கூட்டு நிறுவனம் விரைவில் உருவாக்கப்படும். இந்த திட்டம் மூலம் 2,000 பேருக்கு நேரடியாகவும், 5,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
மேலும், கப்பல் கட்டும் துறையில் 2030-ம் ஆண்டில் இந்தியா உலகின் 10 சிறந்த நாடுகளில் ஒன்றாகவும், 2047-ல் சிறந்த 5 நாடுகளில் ஒன்றாகவும் இருக்கும். இந்த திட்டங்களில் கடலோர சமுதாய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 37 கடல்சார் பயிற்சி நிலையங்கள் மூலம் ஆண்டுக்கு 3.3 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. அமெரிக்க வரிவிதிப்பை சமாளிக்கும் வகையில் வலுவான சூழல் நம்மிடம் உள்ளது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்: முன்னதாக, தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைப்பது தொடர்பாக வஉசி துறைமுக ஆணையம், சிப்காட் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித், சிப்காட் மேலாண் இயக்குநர் செந்தில்ராஜ் ஆகியோர் ஒப்பந்த நகலை பரிமாறிக் கொண்டனர்.