விழுப்புரம்: கனியாமூர் தனியார் பள்ளி வன்முறை வழக்கு விசாரணையில் 41 சிறுவர்கள் விழுப்புரம் இளஞ்சிறார் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதையடுத்து வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் வசித்த 17 வயது சிறுமி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர், கடந்த 13-07-22-ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு, ஜூலை 17-ம் தேதி மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
பள்ளி வளாகத்தில் இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டன. பேருந்துகள், காவல்துறை வாகனங்கள் மற்றும் வகுப்பறைகள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இதில் பள்ளி முழுவதும் எரிந்து சேதமடைந்தது. மாணவியின் மரண வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். பள்ளியில் நடைபெற்ற வன்முறை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி 53 சிறுவர்கள் உள்பட 916 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 53 சிறுவர்கள் மீதான இறுதி அறிக்கை, விழுப்புரம் இளஞ்சிறார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, விசாரணை நடைபெறுகிறது.
இந்த வழக்கு இன்று (ஜுன் 13) விசாரணைக்கு வந்தது. இதில் 53 சிறுவர்களில் 41 பேர் ஆஜராகினர். 12 பேர் ஆஜராகவில்லை. இதற்கான காரணம் குறித்து மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) ராஜேஸ்வரி விசாரணையை வரும் ஆகஸ்ட் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.