சென்னை: “பிரதமர் வீடு வழங்கும் திட்டம் , பிரதமர் மீன்வளத் திட்டம் , உயிர்நீர் எனப் பிரதமரின் பெயரையும் ஸ்டிக்கரில் பிரதமரின் முகத்தையும் தாங்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம் அவர்களைக் காட்டிலும் அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான். இனியாவது, கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியும் பழக்கத்தை மத்திய பாஜக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும் ஸ்டிக்கரில் பிரதமரின் முகத்தையும் தாங்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம் அவர்களைக் காட்டிலும் அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான்.
படையப்பா படக் ‘காமெடி’ போல “மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது” என சேலம் அரசு விழாவில் பேசியிருந்தேன். பேசினேன் என்பதைவிட பேசவேண்டிய நிலைக்கு உள்துறை அமைச்சரின் அடிப்படையற்ற குற்றச்சாட்டால் தள்ளப்பட்டேன் என்றுதான் கூறவேண்டும்.
அது ‘தி இந்து’ நாளிதழில் செய்தியாகி, தரவுகளோடு விவரிக்கப்பட்டுள்ளது. இனியாவது, கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியும் பழக்கத்தை மத்திய பாஜக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்,” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.