சென்னை: சென்னை திருவான்மியூர் பகுதியில் தூய்மைப்பணியின்போது கிடைத்த தங்கச் சங்கிலியை காவல் நிலத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளரை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா நேற்று கவுரவித்தார்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலத்தில் இ.சி.ஆர் பிரதான சாலையில், மருதீஸ்வரர் கோவில் எதிரே, நேற்று முன்தினம் (செப்.4) தூய்மைப் பணியின் போது தங்கச் சங்கிலியை கண்டெடுத்த தூய்மைப் பணியாளர் கிளாரா, அதை உடனடியாக திருவான்மியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதையறிந்த முதல்வர் ஸ்டாலின், தூய்மைப் பணியாளர் கிளாராவின் நேர்மை செயலை பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தார். துணை முதல்வர் உதயநிதி, கிளாராவை தனது முகாம் அலுவலகத்துக்கு நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்து, வெகுமதி வழங்கிப் பாராட்டினார்.
ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு: முதல்வரின் உத்தரவின்படி, நேர்மையாகச் செயல்பட்ட தூய்மைப் பணியாளர் கிளாராவை ரிப்பன் மாளிகைக்கு நேற்று வரவழைத்த மேயர் ஆர்.பிரியா, அவருக்கு சால்வை அணிவித்து, மாநகராட்சி சார்பில் ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசை வழங்கிப் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையர் (சுகாதாரம்) முனைவர் வீ.ப.ஜெயசீலன், திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்புப் பொறியாளர் ஏ.எஸ். முருகன், செயற்பொறியாளர் விஜய் அரவிந்த் ஆகியோர் உடனிருந்தனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.