சொத்து வரி முறைகேடு வழக்கில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதால், சட்ட சிக்கல் காரணமாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நெருக்கடிக்கு மேயர் இந்திராணி உள்ளாகியுள்ளார்.
மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு வழக்கில் திடீர் திருப்பமாக திமுக மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் கைதாகியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திராணி மேயராக இருந்தாலும், இதற்கு முன்பு அரசியலில் இல்லை. இதனால் தனது கணவர் வழிகாட்டுதலோடு மாநகராட்சி நிர்வாகத்தை நடத்தி வந்தார். கட்சி ரீதியாக பொன்.வசந்த் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதனால் மாநகராட்சி நிர்வாகத்தில் நேரடியாக தலையிட முடியாத சூழல் நிலவியது. எனினும், இந்திராணி மேயராக பணியை தொடர்ந்தார்.
தற்போது பொன்வசந்த் கைதானதால், தொடர்ந்து மேயராக செயல்படுவதில் இந்திராணி பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. தனிநபராக மாநகராட்சி நிர்வாகத்தையும், அரசியல் அனுபவம் கொண்ட அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், மூத்த கவுன்சிலர்கள், மாநகர கட்சி நிர்வாகிகளை அவர் எதிர்கொள்வது சிரமம். அவர் தனிப்பட்ட முறையில் யாரிடமும் பெரிய அளவில் தொடர்பில் இல்லாததால், அடுத்து என்ன முடிவெடுப்பது, யாரை நம்புவது, எப்படி செயல்படுவது என செய்வதறியாமல் தவித்து வருகிறார்.
இது குறித்து திமுக நிர்வாகிகள் கூறியதாவது: பொன் வசந்த் சொத்துவரி முறைகேடு உள்ளிட்டவற்றில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுவதால், அதற்கு மேயர் இந்திராணியும் பொறுப்பாவார். மத்திய குற்றப் பிரிவு போலீஸார் மேயர் இந்திராணியையும் அழைத்து விசாரிக்கலாம். ஏற்கெனவே மண்டலத் தலைவர்கள் ராஜினாமா, 19 ஊழியர்கள் சஸ்பெண்ட், 17 பேர் கைது போன்ற நடவடிக்கைகளால் மாநகராட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. தற்போது மேயரின் கணவரும் கைதாகியுள்ளதால், அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் மேயர் இந்திராணி பெயரைப் பயன்படுத்தி நடந்துள்ளதாகத்தான் கருதப்படும்.
இந்நிலையில், இந்திராணியே மேயராக தொடரும்பட்சத்தில் வழக்கு விசாரணையின் நம்பகத்தன்மையில் சந்தேகம் ஏற்படக்கூடும். ஆவணங்கள், ஆதாரங்கள், சாட்சிகளைப் பாதுகாப்பதில் சட்ட சிக்கல் ஏற்படும். அதனால், பொன்வசந்த் வழக்கு விசாரணையை நேர்மையான முறையில் எதிர்கொள்ள ஏதுவாக, இந்திராணியை மேயர் பதவியில் இருந்து கட்சித் தலைமை நீக்க வாய்ப்புள்ளது. இல்லாவிடில் ராஜினாமா செய்யும்படி வலியுறுத்தலாம்.
ஏற்கெனவே மண்டலத் தலைவர்கள், 2 நிலைக்குழுத் தலைவர்கள் பதவி பறிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு பதிலாக புதியவர்களை நியமிப்பதில் திமுக மேலிடம் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், மேயர் பதவி விவகாரத்தில் அதேபோன்ற நிலையை கடைப்பிடிக்க முடியாது. மேயர் இந்திராணி பதவியை ராஜினாமா செய்து, அவருக்குப் பதில் புதிய மேயரை தேர்ந்தெடுக்காவிட்டால், துணை மேயராக உள்ள சிபிஎம் கட்சியைச் சேர்ந்த நாகராஜன்தான் பொறுப்பு மேயராக செயல்படுவார். அதற்கு உள்ளூர் திமுக நிர்வாகிகளும், கவுன்சிலர்களும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
மேயர் இந்திராணி பதவியை பறித்தால், புதிய மேயரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். மேயர் பதவியை கைப்பற்ற கோஷ்டி, சமூகம் மற்றும் அரசியல் ரீதியாக திமுக கவுன்சிலர்களிடையே போட்டி ஏற்படும். அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாநகர திமுக மாவட்டச் செயலாளர் தளபதி ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களை கொண்டுவருவதில் காட்டும் ஆர்வத்தால் உட்கட்சி பூசல் அதிகரிக்கும். தேர்தல் நெருங்கும் சூழ்நிலையில், மேயர் பதவி விவகாரத்தில் குழப்பம்தான் தொடர்கிறது. இவ்வாறு கட்சியினர் தெரிவித்தனர்.