கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் மூன்று பேர் தற்காலிக இடைநீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாமக தலைமை நிலைய செயலாளர் ம.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் அனுமதியோ உத்தரவோ இல்லாமல் எந்தவொரு முடிவையும் கட்சி சார்பாக சட்டமன்ற உறுப்பினர்களோ மற்றவர்களோ கட்சியின் விதிகளின் அடிப்படையில் தன்னிச்சையாக எந்த செயலும் செய்வது சுட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் ஒழுங்கீன நடவடிக்கை என்று கருதப்படும் என்பது விதி.
சமீபகாலமாக பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களான சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் மூவரும் கட்சி கட்டுப்பாட்டை மீறி செய்துவரும் செயல் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஜி.கே.மணி அவர்களால் கட்சியின் தலைமைக்கு கொண்டுவரப்பட்டு கட்சியின் தலைமை நிர்வாக்குழு அதனை ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிசீலனைக்கு அனுப்பியதில், அந்த குழு அந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வழக்கறிஞர் கே.பாலு ஆகியோரின் செயல்பாடுகள் மற்றும் தமிழக சட்டப்பேரவை சபாநாயகரை சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் அவர்களை பொய்யாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி விட்டதாக சொன்ன செயல் ஆகியவை ஒழுங்கீனமான செயல் என்பது முதற்கட்ட விசாரனையில் தெரியப்படுத்தியதால் அவர்கள் மீது விரிவாக விசாரனை நடத்த வேண்டியிருப்பதால் நால்வரும் கட்சியின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள்.
ஒழுங்கு நடவடிக்கைக் குழு முன் அவர்கள் நால்வரும் விசாரனைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டியிருப்பதால் அதுவரை கட்சித் தொண்டர்களும் மற்ற தலைவர்களும் அவர்களிடம் கட்சி சம்மந்தமாக எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். விசாரனைக் குழு அவர்கள் நால்வரையும் விசாரனைக்கு அழைத்து விளக்கம் கேட்பதற்கு முழு அதிகாரமும் நிறுவனர் மற்றும் தலைவர் கொடுத்துள்ளார் என்பதையும் தெரியப்படுத்துகிறோம்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.