ஈரோடு: கோபியில் கட்சியினருடன் நேற்று ஆலோசனை நடத்திய அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், வரும் 5-ம் தேதி மனம் திறந்து பேசுவதாக அறிவித்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
அத்திக்கடவு-அவிநாசி திட்ட கூட்டமைப்பு சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு அன்னூரில் நடந்த பாராட்டு விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெறாததைக் கண்டித்து, முன்னாள் அமைச்சரும், கோபி தொகுதி எம்எல்ஏவுமான கே.ஏ.செங்கோட்டையன் விழாவைப் புறக்கணித்தார்.
தொடர்ந்து, பழனிசாமியின் பெயரை தவிர்த்து செங்கோட்டையன் பேசியது, அவரது அதிருப்தியை வெளிப்படுத்தியது. எனினும், அவரை சமாதானப்படுத்த கட்சித் தலைமை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், கோபியில் உள்ள தனது வீட்டில் நேற்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், “கோபியில் வரும் 5-ம் தேதி காலை செய்தியாளர்களை சந்தித்து மனம் திறந்து பேச உள்ளேன். அதுவரை பொறுமை காக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் 3 மணி நேரத்துக்கும் மேலாக அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி மற்றும் ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டம் முடிந்து வெளியே வந்த செங்கோட்டையனிடம், “சசிகலா, ஓபிஎஸ், டிடிவி.தினகரன் இணைப்பு குறித்து வலியுறுத்துவீர்களா” என செய்தியாளர்கள் கேட்டபோது, “உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் 5-ம் தேதி விடை அளிக்கப்படும்” என்றார். கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக நிர்வாகிகள், செங்கோட்டையன் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்றனர்.
பரவும் வதந்திகள்: செங்கோட்டையனுக்கும் அதிமுக தலைமைக்கும் இடையே ஏற்பட்டுள்ள முரண்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்காததால், கடந்த 6 மாதங்களாக பல்வேறு வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இதில், செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைய உள்ளார் என்ற வதந்தியும் ஒன்றாகும். இந்நிலையில், வரும் 5-ம் தேதி மனம் திறந்து பேச உள்ளதாக செங்கோட்டையன் அறிவித்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.