வேலூர்: “கடந்த தேர்தலில் அதிமுகவை நான்கு துண்டுகளாகவும், தற்போது பாமகவை இரண்டு துண்டுகளாவும் பாஜகவினர் ஆகிவிட்டார்கள். கட்சிகளை இரண்டாக உடைத்து மகிழ்வது தான் பாஜகவின் வேலை” என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று மாலை பங்கேற்ற தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “திமுக கூட்டணி மண் கோட்டை அல்ல, எஃகு கோட்டை. சுக்கு நூறாக உடையாது. உறுதியான கூட்டணி.
பட்டியலினத்தவர்கள், இதர பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையிரை ஒருங்கிணைத்து ஒற்றுமையை கொண்டுவர வேண்டும் என ராகுல் காந்தி விரும்புகிறார். அதைத்தான் பாமக தலைவர் ராமதாஸை சந்தித்தபோது தெரிவித்தேன். தமிழகத்தில் மன்னராட்சி நடப்பதாக பழனிசாமி பேசியுள்ளார். மன்னராட்சி ஒழிந்து பல காலம் ஆகிறது. அமித் ஷாவை பேரரசராகவும், தன்னை மன்னராகவும் நினைத்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி. அவர், உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புரை செய்தாலும் எடுபடாது.
பாஜகவுடன் சேர்ந்ததால் அதிமுகவை மக்கள் புறக்கணிக்கிறார்கள். அதிமுக – பாஜக கூட்டணி, இயற்கைக்கு எதிரான, உண்மைக்கு புறம்பான கூட்டணி. ஒருபோதும் இந்த கூட்டணியை மக்கள் அங்கீகரிக்க மாட்டார்கள். கடந்த தேர்தலில் அதிமுகவை நான்கு துண்டுகளாகவும், தற்போது பாமகவை இரண்டு துண்டுகளாவும் பாஜகவினர் ஆகிவிட்டார்கள். கட்சிகளை இரண்டாக உடைத்து மகிழ்வது தான் பாஜகவின் வேலை.
அமித் ஷா தொடர்ந்து கூட்டணி ஆட்சி என கூறி வருகிறார். ஆனால், எடப்பாடி பழனிசாமி கூட்டணி ஆட்சி இல்லை என எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கிறார். என்ன மிரட்டல், என்ன பயம் காரணமாக அதிமுக பாஜக உடன் கூட்டணி வைத்துள்ளது என தெரியவில்லை.
திமுக – காங்கிரஸ் கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். நாங்களும் தமிழகத்தில் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டோம். விரைவில், எங்க தேசிய தலைவர்களும் தமிழகம் வர உள்ளார்கள். 2 லட்சம் கிராம கமிட்டி நபர்களை அழைத்து அறிமுகம் செய்து வைக்க உள்ளோம்” என்றார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.