சென்னை: பாஜக கூட்டணியில் கடைசி நிமிடத்தில் கூட மாற்றங்கள் வரலாம் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: குடிசைகளே இருக்கக் கூடாது என்ற பிரதமரின் குறிக்கோளுக்கு ஏற்ப ஜிஎஸ்டி வரி குறைப்பால் கட்டுமானப் பொருட்கள் விலை குறைக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விலை குறையும்போது, உற்பத்தியும் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்திப்பை பொருத்த வரை கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசுவது நல்ல விஷய மாகத்தான் இருக்கும். எதிர்க்கட்சியினரை சந்தித்தால்தான் பிரச்சினை இருக்கிறது எனலாம்.
அதிமுகவை 4 ஆண்டுகள் காப்பாற்றியது பாஜக தான் என்பதை எந்த அர்த்தத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சொன்னார் என்று தெரியவில்லை. அதே நேரம், அதிமுக ஆட்சியில் மத்திய அரசின் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தமிழகத்துக்கு அவர் பெற்றுத் தந்தார். இதற்கு உறுதுணையாக மத்திய அரசு இருந்தது என்ற பொருளில் அவர் சொல்லியிருக்கலாம்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எதற்காக பாஜகவையும், என்னையும் விமர்சனம் செய்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. அவர்தான் பழனிசாமி முதல்வராக வர வேண்டும், அமித் ஷா சொன்னால் பிரச்சாரம் செய்வோம் என்றார். இப்போது இப்படி பேசுவது ஏன் எனத் தெரியவில்லை. இதற்கிடையே, வில்லிபுத்தூரில் என்னை நண்பர் என்றும் அவர் கூறியுள்ளார். அரசியலில் எல்லாருமே எனக்கு நண்பர்கள் தான்.
பாஜக அடுத்த கட்சி பிரச்சினையில் தலையிடாது. தேர்தலுக்கு இன்னும் 6 மாதம் இருக்கிறது. கடைசி நிமிடங்களில் கூட மாற்றம் வரலாம். பாமக, அதிமுக கட்சிகளில் பிரச்சினைகள் உள்ளன. புயலுக்குப் பிறகுதான் அமுத மழை பொழியும். அதுபோல பிரச்சினைக்கு பிறகு நல்ல தீர்வு கிடைக்கும். முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது பற்றி மத்திய அரசு முடிவெடுக்கும்.