மதுரை: மாநகராட்சி கடைகளுடைய வாடகையை அதன் உரிமையாளர்கள் நிலுவையில்லாமல் உடனுக்குடன் எளிமையாக செலுத்தும் வகையில், மாநகராட்சி நிர்வாகம் கடைகள் முன் ‘கியூ ஆர்’ கோடு ஓட்டி வாடகை வசூல் செய்யும் புதிய நடைமுறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
100 வார்டுகளில் மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான 3,378 கடைகள் உள்ளன. இந்த கடைகளை ஏலம் எடுத்தவர்கள், கடைகளை கால நீட்டிப்பு செய்வதற்கு 3 ஆண்டுக்கு ஒரு முறை மாநகராட்சியில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதற்கு, கடை உரிமையாளர்கள், புதுப்பித்தல் படிவத்தை நிரப்பி, உண்மையான கடை உரிமையாளர்தானா என்பதற்கான ஆதார் கார்டு போன்ற உரிய ஆதாரங்களை சமர்பித்து கடைகளுடைய சதுர அடி அடிப்படையில் குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டும்.
கடந்த காலத்தில், இந்த கடைகளை முறையாக புதுப்பித்துக் கொள்ள கடை உரிமையாளர்களும் ஆர்வம் காட்டாததோடு, மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், கடைகளை உள் வாடகைக்குவிடுவது, கடை உரிமையாளர்கள் மரணமடைந்த பிறகு அந்த கடைகளை கைப்பற்றுவதில் அவரது வாரிசுதார்களிடையே நீடிக்கும் மோதல் போன்ற பல்வேறு காரணங்களால் புதுப்பித்துக் கொள்ளாமலே 1000 கடைகள் இதுவரை செயல்பட்டு வந்தன.
கடைகளுக்கான வாடகையையும் உரிமையாளர்கள் முறையாக செலுத்தாததால் மாநகராட்சிக்கு கடைகள் மூலம் கிடைக்கும் வரியில்லா வருவாய் பாதிக்கப்பட்டது. கடைகளை ஏலம் எடுத்தவர்கள், பெரும்பாலும் அரசியல் வாதிகளும், அவர்கள் பின்னணியில் செயல்படக்கூடிய அரசியல் கட்சி சார்புடைய வியாபாரிகளுமே ஆவார்கள். அதனால், அவர்களுக்கு நெருக்கடி கொடுத்து கடைகளை வசூல் செய்வதற்கு மாநகராட்சி வருவாய் பிரிவு அதிகாரிகள் போதுமான நடவடிக்கை எடுக்காமல் வரி வருவாயில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தனர்.
இந்நிலையில் தற்போது ஆணையாளர் சித்ரா, 100 வார்டுகளிலும் உள்ள மாநகராட்சி கடைகளில் கால நீட்டிப்பு செய்வதற்கு புதுப்பிக்காத கடைகள், வாடகை முறையாக செலுத்தாத கடைகள், வாடகை நிலுவை அதிகம் வைத்துள்ள கடைகளை பட்டியல் எடுத்து அவற்றை வசூல் செய்வதற்கும், கடைகளை புதுப்பிக்கவும் ‘கெடு’ விதித்து ‘நோட்டீஸ்’ வழங்க உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் தற்போது 3 ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்காத 800 கடைகளுக்கு மாநகராட்சி வருவாய் பிரிவு அதிகாரிகள் ‘நோட்டீஸ்’ விட்டுள்ளனர். மாநகராட்சி கடைகளுடைய வாடகையை, பில்கலெக்டர்கள் எளிமையாக வசூல் செய்வதற்கு ஆணையாளர் சித்ரா, அனைத்து கடைகளிலும் ‘கியூ ஆர்’ கோடு ஓட்டி, மாதந்தோறும் வாடகையை செலுத்துவதற்கு புது நடைமுறையை அறிமுகப்படுத்த உள்ளார்.
இதுகுறித்து மாநகராட்சி வருவாய் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘‘கால நீட்டிப்பு செய்வதற்கு புதுப்பிக்காத 1000 கடைகள் மீது எடுத்த நடவடிக்கையால் தற்போது 300 கடைகள் புதுப்பிக்கப்ட்டுள்ளன. மீதமுள்ள கடைகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பூட்டி ‘சீல்’ வைப்பது, நோட்டீஸ் விடுவது போன்ற நடவடிக்கையால் தற்போது கடைகளுடைய வாடகையையும் ஒரளவு வசூல் செய்துவிட்டோம்.
ஆணையாளர் சித்ரா, மாத வாடகையை, மாநகராட்சி கடை உரிமையாளர்கள் நிலுவை வைக்காமல் அந்தந்த மாதங்களிலே எளிமையாக செலுத்துவதற்கு வசதியாக கடைகள் முன் மாநகராட்சி சார்பில் ‘கியூ ஆர்’ கோடு ஓட்டி வாடகை வசூல் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். அதனால், இனி பில் கலெக்டர்கள், கடை உரிமையாளர்களிடம் கெஞ்சி கூத்தாடி வசூல் செய்ய வேண்டாம் என்றும், கடை உரிமையாளர்களே, கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து மாத வாடகை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றனர்.