சென்னை: தமிழகத்தில் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்ட‘நீலப் பொருளாதாரம்’ அதாவது கடல்வழி வணிகத்தை மேலும் ஊக்குவிக்க வேண்டியது நம் கடமை என்று துறைமுக மேம்பாட்டாளர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தினார்.
சென்னை தி.நகரில் நீலப் பொருளாதார மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தின் கடற்கரை பன்னாட்டுக் கப்பல்கள் செல்லும் வழித்தடத்துக்கு மிக அருகாமையில் உள்ள பகுதியாகும். 14 கடலோர மாவட்டங்கள் கொண்ட தமிழகத்தின் கடற்கரைப் பகுதியை பல்வேறு தரப்பினரும் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக கடற்கரை பகுதியிலேயே குடியிருந்து மீன்பிடித்தொழில் செய்து வரும் மீனவர்கள் வசிக்கின்றனர். இதுதவிரமீன்பிடி துறைமுகங்கள், மீன்வளர்ப்புப் பண்ணைகள், வணிக ரீதியாக மத்திய மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்கள், பொழுதுபோக்கு கடற்கரைப் பகுதிகள் (Beaches), உள்ளன.
மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதிகளான அலையாத்தி காடுகள், ஆமைகள் முட்டையிடும் பகுதிகள், மன்னார் வளைகுடா பவளப்பாறைகள் நிறைந்த பகுதிகள்,பறவைகள் சரணாலயங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழிபாட்டுத் தலங்கள், கடலோர தொழில் பூங்காக்கள், கலங்கரை விளக்கங்கள் தமிழக கடற்பகுதிகளில் அமைந்துள்ளன.
உலகளவில் 80 சதவீத வணிகமும், மிக நீண்ட 11 ஆயிரம் கிலோ மீட்டர் நீள கடற்கரை பகுதியைக் கொண்ட நம் நாட்டில் சுமார் 95 சதவீத வணிகமும் கடல்வழியாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்ட கடல்வழி வணிகத்தை மேலும் ஊக்குவிக்க வேண்டியது நம் கடமை. அதற்கு வணிகத் துறைமுகங்கள், மீன்பிடித் துறைமுகங்கள், கடல்சார் சுற்றுலா மேம்பாடு, கப்பல் கட்டுதல் மற்றும் பழுதுபார்த்தல் ஆகிய துறைகளில் நாம் மேலும் முன்னேற்றமடைய திட்டங்களை வகுக்க வேண்டும். கடல் மார்க்கமாக கப்பல்கள் மூலம் கொண்டு செல்லும் சரக்கு போக்குவரத்து செலவு, சாலை மற்றும் ரயில் மூலமாக கொண்டு செல்ல ஆகும் செலவை விட மிகக் குறைவானதாகும்.
சென்னை – கன்னியாகுமரி சாலையும், கிழக்கு கடற்கரைச் சாலையும் நம் கடலோர வணிகத் துறைமுகங்கள் மற்றும் மீன்பிடி துறைமுகங்களுக்கு எளிதான சாலை இணைப்பை வழங்குகின்றன. தமிழக கடற்கரை பகுதிகளுக்கு ரயில் இணைப்பும் போதிய அளவில் உள்ளது. இதை துறைமுக மேம்பாட்டாளர்கள் கருத்தில் கொண்டு துறைமுகங்களை அமைக்கவும், தொழில் தொடங்கவும் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மாநாட்டில், சென்னை மற்றும் காமராஜர் துறைமுக ஆணையத்தின் தலைவர் சுனில் பாலிவால், நெடுஞ்சாலைத் துறை செயலர் இரா.செல்வராஜ், தமிழ்நாடு கடல்சார் வாரிய தலைமை செயல் அலுவலர் தி.ந.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.