ராமேசுவரம் / முதுமலை: கடலோரக் காவல் படை சார்பில் இந்தியா-இலங்கை எல்லைப் பகுதியான தனுஷ்கோடி அருகேயுள்ள அரிச்சல்முனையில் நேற்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தேசியக் கொடிகளை ஏந்திய வண்ணம் கடலோரக் காவல் படை வீரர்கள் வலம் வந்தனர்.
இந்திய கடலோரக் காவல்படை முகாம் சார்பில் தனுஷ்கோடி கடல் பகுதியில் சுதந்திர தின விழாகொண்டாடப்பட்டது. அப்போது ஃஹோவர் கிராப்ட் ரோந்துப் படகில், தேசியக் கொடிகளை ஏந்திய வண்ணம் கடலோரக் காவல் படை வீரர்கள் வலம் வந்தனர். தொடர்ந்து, தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் கொடியேற்று விழா நடைபெற்றது.
மேலும், தனுஷ்கோடி கடற்பகுதியில் மூவண்ணக் கொடியை பிடித்துக் கொண்டு கடலோரக் காவல் படை வீரர்கள் நீச்சல் அடித்தனர். அதேபோல, பாம்பன் சாலைப் பாலத்தில் தேசியக் கொடியுடன் இந்திய கடலோரக் காவல் படையினர் அணிவகுத்து நின்றனர்.

கொண்டு நீச்சல் அடித்த கடலோர காவல் படை வீர்கள்.
யானைகள் மரியாதை… நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில், சுதந்திர தினத்தையொட்டி யானைகள் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தின. தெப்பக்காடு யானைகள் முகாமில் 20-க்கும் மேற்பட்ட வளர்ப்பு யானைகள் உள்ளன.
இங்கு நேற்று சுதந்திர தின விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. யானைகள் அணிவகுத்து நிற்க வைக்கப்பட்டு, அவற்றின் மீது தேசியக் கொடியை ஏந்தியவாறு பாகன்கள் அமர்ந்திருந்தனர். புலிகள் காப்பக இணை இயக்குநர் வித்யா தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.

நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்ற யானைகளின்
மீது தேசியக் கொடியுடன் அமர்ந்திருந்த பாகன்கள்.
அப்போது, வளர்ப்பு யானைகள் தும்பிக்கையை உயர்த்தி பிளிறியபடி தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தின. யானைகளின் பிளிறல் அங்கு கூடியிருந்த சுற்றுலாப் பயணிகளை மெய்சிலிர்க்க வைத்தது. தொடர்ந்து, அனைத்து யானைகளுக்கும், கரும்பு, வெல்லம் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டன.
இதை அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் ரசித்தனர். இதேபோல, குன்னூரில் 79-வது சுதந்திர தின விழாவையொட்டி, உயிர்நீத்த ராணுவ வீரர்களின் போர் நினைவு சதுக்கத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ராணுவ அதிகாரிகள், வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.