சென்னை: கடலூர் ரயில் விபத்தை திமுகவினர் மொழி பிரச்சினையாக்குகின்றனர் என பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நடந்த ரயில் விபத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து அந்தப் பகுதி ரயில்வே கேட் கீப்பரின் தவறினால் நடந்துள்ளது. அந்த நபர் உறுதியாக தண்டிக்கப்பட வேண்டும். அதில் எந்த மாற்று கருத்துமில்லை. இது போன்ற விபத்துகளை தடுப்பதற்காக தான், ரயில்வே கேட் இருக்கும் பகுதிகளில் சுரங்கப்பாதையை ரயில்வே துறை அமைத்து வருகிறது.
இந்நிலையில், செம்மங்குப்பத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க ரயில்வே துறை சார்பில் நிதி ஒதுக்கி ஒப்புதல் அளிக்கப்பட்டு ஒரு ஆண்டாகியும், அதற்கான அனுமதியை மாவட்ட ஆட்சியர் வழங்கவில்லை என்பது குரூரமான உண்மை. அதை பற்றி தமிழக அரசு ஏன் வாய் திறக்க மறுக்கிறது. இதற்கிடையில் திமுகவினர் சிலர், அந்த விபத்துக்கு காரணம் கேட் கீப்பருக்கு தமிழ் மொழி தெரியாதது தான் என இந்த விவகாரத்தில் மொழி பிரச்சினையை திடீரென புகுத்துகிறார்கள்.
செம்மங்குப்பத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க ஓராண்டு கடந்தும் மாவட்ட ஆட்சியர் அனுமதி அளிக்காததால், தமிழக அரசின் நிர்வாகத்தை மக்கள் குறை சொல்லிவிடக் கூடாது என்பதற்காக, அதனை மூடி மறைக்க ரயில் விபத்து சம்பவத்தில் வேண்டுமென்றே மொழி பிரச்சினை திமுக தூண்டி விட பார்க்கிறது.
அந்த கேட் கீப்பர் மது அருந்தியிருந்ததாக கூறுகிறார்கள். அப்படியென்றால் திமுக அரசு டாஸ்மாக்கில் விற்பனை செய்த மதுவினால் தான் இந்த ரயில் விபத்து நடந்திருக்கிறது என சொல்ல முடியுமா? திமுக அரசின் தவறை மூடி மறைப்பதற்காக மொழி பிரச்சினையை கொண்டு வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது’ என்று அவர் கூறினார்.