கடலூர்: கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் நேற்று முன்தினம் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். ஒரு மாணவர் மருத்துவமனையில் சிகிச்கை பெற்று வருகிறார். இந்நிலையில் தனியார் பள்ளி வேனில் உதவியாளர் இல்லாமல் இயக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) மோகன், தனியார் பள்ளிக்கு சம்பவத்தன்று வேனியில் உதவியாளர் இல்லாதது ஏன் என்று கேட்டு நேற்று நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று ரயில்வே துறையின் 6 பேர் கொண்ட விசாரணை குழு விபத்து நடந்த செம்மங்குப்பம் பகுதியில் உள்ள வீடுகளில் இருந்தவர்களிடம் விபத்து பற்றி கேட்டறிந்தனர்.
இதைத்தொடந்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற அக்குழுவினர் அங்கு டாக்டர்களிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த மாணவர் விஷ்வேஸ் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வேன் ஓட்டுநர் சங்கர் மேல்சிகிச் சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.