கடலூர்: அரசு வழங்கும் சேவைகள் மக்களுக்கு எளிமையாக கிடைத்திடும் வகையில், அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற புதிய திட்டத்தை சிதம்பரத்தில் நேற்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முன்னதாக இதற்காக சென்னையில் இருந்து சிதம்பரத்துக்கு நேற்று முன்தினம் இரவு வந்த முதல்வர் ஸ்டாலி னுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சிதம்பரத்தில் நேற்று காலை நடந்த இந்நிகழ்வில், முதல்வர் ஸ்டாலின் பயனாளி ஒருவருக்கு காதொலி கருவியை வழங்கி, இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து சமூகப் போராளி எல்.இளைய பெருமாளின் நூற்றாண்டு அரங்கம் மற்றும் சிலையை முதல்வர் திறந்து வைத்து, அவரது குடும்பத்தினரை சந்தித்து, இளைய பெருமாளின் சேவையை நினைவு கூர்ந்தார்.
அமைச்சர்கள், பிற கட்சித் தலைவர்களுடன் கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, சிதம்பரம் நகர் மன்றத்தலைவர் செந்தில்குமார், அண்ணாமலை பேரூராட்சி மன்றத் தலைவர் பழனி, கடலூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் எம்.ஆர்.கே.பி. கதிரவன், கடலூர் மாநகர திமுக செயலாளர் ராஜா, முன்னாள் எம்எல்ஏ துரை.கி. சரவணன், திமுக பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், மருத்துவர் அணி அமைப்பாளர் பால கலைக்கோவன், கவுன்சிலர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், அப்பு சந்திரசேகர், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய செயலாளர் தங்க ஆனந்தன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் நகர்புறப் பகுதிகளில் 130 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 248 முகாம்களும் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. முகாம் நடைபெறும் பகுதிகளில் 2 நாட்களுக்கு முன்பாக தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று முகாம் குறித்த விவரங்களை தெரியப்படுத்துவதோடு, விண்ணப்பங்களும் வழங்கப்பட உள்ளன.
சிதம்பரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தொடங்கி வைத்த நிலையில், நேற்று மாலையில், கடலூர் மாவட்டத்துக்காக முதல்வர் ஸ்டாலின் கீழ்கண்ட புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். சிதம்பரம் நகரில் போக்கு வரத்து நெரிசலை குறைக்க தில்லையம்மன் ஓடை மற்றும் கான் சாகிப் கால்வாய் ஆகியவற்றை ஒட்டி ரூ.20 கோடி செலவில் புதிய இணைப்பு சாலை அமைக்கப்படும்.
கடலூர் அருகே உள்ள அரிசி பெரியகுப்பத்தில் உண்டு உறைவிட பழங்குடியினர் பள்ளி தொடங்கப்படும். ஸ்ரீமுஷ்ணம் வட்டம் காவிரி டெல்டா பகுதியாக அறிவிக்கப்படும். வீராணம் ஏரியில் சுற்றுலாவை மேம்படுத்தும் பொருட்டு படகு போக்குவரத்தை செயல்படுத்த ரூ.10 கோடி செலவில் ஏரி தூர் வாரும் பணி மற்றும் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
சிதம்பரம் அருகே உள்ள கூடுவெளி சாவடியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறனை மேம்படுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் புதிய திறன் மேம்பாட்டு நிலையம் மற்றும் தொழிற்பேட்டை அமைக்கப்படும். மேற்கண்ட தகவலை முதல்வர் ஸ்டாலின் சார்பில், கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை வெளியிட்டுள்ளது.
கொடுக்கன்பாளையத்தில் காலணி தொழிற்சாலை: இந்நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “கடலூர் மாவட்டம் கொடுக்கன்பாளையத்தில் 150 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ.75 கோடி மதிப்பில் தோல் அல்லாத காலணி தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும். இது, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாதவாறு உருவாக்கப்படும். இதனால் கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த 12 ஆயிரம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்” என்று தெரிவித்தார்.