கடலூர்: கடலூர் மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினர் 15 இடங்களில் மறியலில் ஈடுபட்டனர். இதில் 1500 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், அனைத்து பேருந்துகளும் இயங்கின. கடைகள் அடைக்கப்படவில்லை.
மத்திய அரசை கண்டித்தும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோருதல், நான்கு தொழிலாளர் நல சட்ட தொகுப்புகளை ரத்து செய்யக் கோருதல் உள்ளிட்ட18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்று (ஜூலை.9) நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அனைத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டு இருந்தன. அதன்படி இன்று (ஜூலை.9) கடலூர் மாவட்டத்தில் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன.
மாவட்டத்தில் கடலூர் ,சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி, திட்டக்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பேருந்துகள் இயங்கின. கடைகள் திறந்து இருந்தன. ஆட்டோக்கள் இயங்கின. பள்ளி கல்லூரிகள் இயங்கின. கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் தனியார் பேருந்துகள் குறைந்து அளவு இயக்கப்பட்டது.
இந்த பொது வேலை நிறுத்தத்தால் கடலூர் மாவட்டத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை. தொழிற்சங்கத்தினர் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம், பண்ருட்டி, புவனகிரி, நெய்வேலி உள்ளிட்ட மாவட்டத்தில் 15 இடங்களில் மறியல் போராட்டங்கள் ஈடுபட்டனர். இதில் 1500 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.