மதுரை: கடலாடி ஓலையிருப்பு கண்மாய் பகுதியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை கட்டுவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்த பாஸ்கரன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு:
சாயல்குடி கிராமத்தில் 17.83 ஹெக்டேர் பரப்பளவில் ஓலையிருப்பு கண்மாய் உள்ளது. கண்மாய் அருகே அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, விடுதி, ஆரம்ப சுகாதார நிலையம், பொது மயானம் ஆகியன அமைந்துள்ளன.
கண்மாய் அருகே 300 குடும்பங்கள் வசிக்கின்றன. கண்மாய் நிரம்பினால் உபரி வெளியேறி மூக்கையூரில் கடலில் கலக்கும். தற்போது உபரி நீர் வெளியேறும் பாதையை தனி நபர்கள் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ளனர். இதனால் கண்மாயிலிருந்து வெளியேறும் உபரி நீர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து மிகப்பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே உபரி நீர் பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் கண்மாய் பகுதியில் 1.97 ஏக்கர் நிலத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை கட்டப்படவுள்ளது. ஏற்கனவே உபரி நீர் செல்லும் பாதை ஆக்கிரமிப்பால் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் பணிமனை கட்டினால் மேலும் பாதிப்பு அதிகமாகும். நீர் நிலை பகுதிகளில் கட்டிடங்கள் கட்டுவது உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. எனவே ஓலையிருப்பு கண்மாய் பகுதியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை கட்ட தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் திருமுருகன் வாதிட்டார். பின்னர் நீதிபதிகள், ஓலையிருப்பு கண்மாய் பகுதியில் போக்குவரத்து கழக பணிமனை கட்ட இடைக்கால தடை விதித்தும், மனு தொடர்பாக 2 வாரத்தில் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.