திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித்குமார் உயிரிழந்த வழக்கை சிபிஐக்கு மாற்றும்படி உத்தரவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த விவகாரத்தில் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கடந்த ஜூன் 28-ம் தேதி வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். விசாரணையின்போது காவலர்கள் நடத்திய தாக்குதல்தான் அவரது இறப்புக்கு காரணம் என்பதை அறிந்ததும் நான் மிகவும் வேதனையடைந்தேன். இது யாராலும் நியாயப்படுத்தப்பட முடியாத, காரணம் சொல்லித் தப்பிக்க முடியாத செயல்.
இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 6 காவலர்கள் சம்பவம் நடந்த அன்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இத்தகைய வழக்குகளில் பின்பற்றப்பட வேண்டிய சட்ட நடைமுறைகளின்படி, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. நேற்று முன்தினம் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இன்று சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். துணை கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இப்படி சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. துயர மரணத்தை அடைந்துள்ள அஜித்குமார் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசினேன். நடைபெற்ற துயரச் சம்பவத்துக்கு எனது வருத்தத்தை அவர்களிடம் தெரிவித்தேன். நியாயமான, ஒளிவுமறைவற்ற, எவ்வித பாரபட்சமுமற்ற விசாரணை மேற்கொள்ளப்படும். இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், அஜித்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் உறுதியளித்துள்ளேன்.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, இவ்வழக்கில் சிபிசிஐடி தனது விசாரணையை தொடரலாம் என தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த சம்பவத்தில் காவல் துறையை சேர்ந்த 5 பேர் மீது குற்றம் சாட்டப் பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை குறித்து, எந்தவிதமான சந்தேகமும் எழுப்பக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற நான் உத்தரவிட்டுள்ளேன். சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை தமிழக அரசு வழங்கும்.
காவல் துறையினர் தங்களது விசாரணையின்போது மனித உரிமையை பாதுகாக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தி இருக்கிறேன். இதுபோன்ற சம்பவங்களை எப்போதும் ஏற்றுக்கொள்வதில்லை. திருப்புவனத்தில் சில காவலர்கள் செய்த செயல், மன்னிக்க முடியாதது. இனி இதுபோன்ற செயல் எக்காலத்திலும், எங்கும் யாராலும் நடந்துவிடக் கூடாது என்பதை எச்சரிக்கையாகவே சொல்ல விரும்புகிறேன். தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என நம்பி காவல் துறையை நாடி வரும் மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் காவல் துறை எப்போதும் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஆறுதல்: உயிரிழந்த அஜித்குமார் குடும் பத்துக்கு பாமக மாநில பொருளாளர் திலகபாமா உள்ளிட்டோர் ஆறுதல் தெரிவித்தனர். தொடர்ந்து, கூட்டு றவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி, தமிழரசி எம்எல்ஏ ஆகியோரும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். அப்போது அமைச்சர் செல்போன் மூலம் அஜித்குமாரின் தாயார் மற்றும் குடும்பத்தினரை தொடர்புகொண்ட முதல்வர், அஜித்குமார் உயிரிழப்புக்கு வருத்தம் தெரிவித்தார்.
இதுகுறித்து அஜித்குமார் சகோதரர் நவீன்குமார் கூறும்போது, ‘முதல்வரிடம் எனது அண்ணணை போலீஸார் தாக்கி கொலை செய்தது குறித்து தெரிவித்தேன். அப்போது `எனக்கும் தெரியும். மனவேதனையாகவும், வருத்தமாகவும் உள்ளது. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்’ என்றார். மேலும், எனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். நிரந்தர வேலை வேண்டும் என்று கேட்டேன்.ஏற்பாடு செய்து தருவதாக கூறினார்.அமைச்சரும் சில நாட்களில் மீண்டும் வருவதாக கூறிவிட்டுச் சென்றார்” என்றார்.