அரூர்: கடத்தூரில் மாணவிகளுக்கு தொல்லை தரும் வகையில் செயல்படும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் கடத்தூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மாணவிகள் படித்து வருகின்றனர். இது தவிர கடத்தூரில் இருந்து தருமபுரி, சேலம், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயில என தினசரி நூற்றுக்கணக்கான மாணவிகள் கடத்தூர் வழியாக செல்கின்றனர். இவர்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றி வரும் இளைஞர்களை தடுக்க வேண்டும் என பொதுமக்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ரவீந்திரன் மற்றும் பெற்றோர் சிலர் கூறியதாவது: “கடத்தூர் பகுதியில் காலை 8 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையும் மாணவிகள் போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்த நேரங்களில் இளைஞர்களின் அட்டகாசமும் அதிகமாக உள்ளது. இருசக்கர வாகனங்களில் ஹார்ன் அடித்தபடி மிக வேகமாக செல்வது, மாணவிகளை செல்போனில் போட்டோ எடுப்பது, ஆபாசமாக பேசுவது, மாணவிகளை கிண்டல் செய்தபடி பின் தொடர்வது, பேருந்துக்காக காத்திருப்போரிடம் கேலி, கிண்டல் செய்வது என இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதனால் மாணவிகளுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது.
இதனை கண்காணித்து அத்துமீறும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கடத்தூரில் காவல் நிலையம், கண்காணிப்பு கேமராக்கள் அமைத்திருந்தும் இளைஞர்கள் இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடுகின்றனர். எனவே, போலீஸார் கண்காணிப்பை அதிகரித்து மாணவிகள் சுதந்திரமாக பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பள்ளி நேரங்களில் போக்குவரத்து அதிகம் உள்ளதால் சாலையை கடந்து சென்று வர மாணவிகள் சிரமப்படுகின்றனர். பள்ளி நேரங்களில் பாதுகாப்பாக சாலையை கடக்க போக்கு
வரத்தை சரி செய்ய போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.