கோவை: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தின் சோதனை பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் வி.நாராயணன் கூறினார்.
இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறியது: “மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த திட்டம் 2018-ல் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த திட்டம். இந்த ஆண்டு ஆளில்லா விண்கலத்தில் ‘வயோமித்ரா’ என்ற இயந்திர மனிதனை அனுப்ப உள்ளோம். டிசம்பர் மாத இறுதியில் இந்நிகழ்வு நடைபெறும். தொடர்ந்து, இரண்டு ஆளில்லா ராக்கெட்களை அனுப்பவும், 2027 மார்ச் மாதம் மனிதர்களை அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.
‘ககன்யான்’ திட்டத்தில் 85 சதவீத சோதனைப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மனிதர்களை அனுப்புவதற்கு பல்வேறு கட்ட சோதனைகள் மேற்கொள்ள வேண்டும். ராக்கெட்டில் விபத்து ஏற்பட்டால் மனிதர்களை பாதுகாப்பாக அழைத்து வருவது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். இஸ்ரோ மட்டுமின்றி கடற்படை, வானியல் துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் இத்திட்டத்தில் இணைந்து செயல்படுகின்றனர்.
நிலாவில் இருக்கக்கூடிய கேமராவில் சிறந்த கேமரா இந்தியாவுடையது தான். ராக்கெட் இன்ஜினிலும் சாதனைகளை படைத்துள்ளோம். மாணவர்கள் விண்வெளி சார்ந்த நடவடிக்கைகளில் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (ஏஐ) விண்வெளித் துறையிலும் வந்துவிட்டது. ‘வயோமித்ரா’ என்பதும் ‘ஏஐ’ தொழில்நுட்பம்தான். ‘சந்திரயான் 4’ நிலாவில் மாதிரிகளை எடுத்து வருவதிலும் ‘ஏஐ’ தொழில் நுட்பத்தை பயன்படுத்த உள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.