சென்னை: ஓரணியில் தமிழ்நாடு மற்றும் தேர்தல் களப்பணிகள் குறித்து திமுக மண்டலப் பொறுப்பாளர்கள், நிர்வாகிகளுடன் அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இது குறித்து திமுக வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று அப்போலோ மருத்துவமனையில் திமுக மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாட்டின் மண் மொழி மானம் காக்க ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்பில் அதிகமான மக்களை இணைத்து மாபெரும் வெற்றி அடைந்து வருவதற்கு காரணமான திமுகவினருக்கு பாராட்டு தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், 150 தொகுதிகளில் 30% உறுப்பினர் சேர்க்கை என்ற இலக்கை அடைந்ததுள்ளதையும் சுட்டிக்காட்டி பாராட்டினார்.
அதேசமயம், திமுக உறுப்பினர் சேர்க்கையில் பின் தங்கியுள்ள ஓரிரு மாவட்டங்கள், தொகுதிகளைக் குறிப்பிட்டு, அவற்றை மண்டலப் பொறுப்பாளர்கள் கவனித்துச் சரிசெய்யுமாறு அறிவுறுத்தினார். சில பாகங்களில் உறுப்பினர் சேர்க்கை விவரங்களில் சில குறைபாடுகள் இருப்பதை சுட்டிக்காட்டியவர், குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் மீண்டும் முதலில் இருந்து உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
வீடு வீடாகச் செல்லும்போது மக்களிடையே கிடைக்கும் வரவேற்பு, திராவிட மாடல் அரசின் திட்டங்கள் குறித்து மகிழ்ச்சியுடன் மக்கள் பேசுவது ஆகியவற்றை மண்டலப் பொறுப்பாளர்கள் விளக்கினர். இந்தக் கலந்துரையாடலில் முதல்வர் ஸ்டாலின், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்துக்கு மக்களிடையே கிடைத்துள்ள வரவேற்பு குறித்தும் கேட்டறிந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.