சென்னை: திமுகவில் புதிய உறுப்பினர்கள் 49.11 லட்சம் பேர் உட்பட 77.35 லட்சம் உறுப்பினர்கள் ஓரணியில் தமிழ்நாடு மூலம் இணைந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை கண்காணிக்க திமுக தகவல் தொழில்நுட்ப அணியினரால் ‘வார் ரூம்’ அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இதன்மூலம், இங்கிருந்தபடியே தமிழகம் முழுவதும் நடைபெறும் உறுப்பினர் சேர்க்கை பணிகள் எந்த அளவில் உள்ளன என்பதை அறிந்து கொள்ள முடியும்.
இந்நிலையில் முதல்வர் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு: நமது திமுக அரசின் சாதனைகளை எடுத்துச்சொல்லி, தமிழகத்தின் மண், மொழி, மானம் காக்கதிமுகவில் உறுப்பினர்களாக இணைய விருப்பமுள்ளதா என்று கேட்கும் போது, ‘‘அரசின் திட்டங்கள் அன்றாட வாழ்விலும், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பயனளிக்கிறது. அதேசமயம் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமைத்தள்ள கூட்டு என்பது, கூட்டணியல்ல; தமிழகத்தை, தமிழகத்தின் ஒற்றுமையை சிதைத்து, மீண்டும் நூறாண்டுகளுக்குப் பின்னோக்கித் தள்ளுவதற்கான சதித்திட்டம் என்பதை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம்’’ என்று தெளிவாக எடுத்துச்சொல்லி ஓரணியில் தமிழ்நாடு என இணைகின்றனர் தமிழக மக்கள்.
இந்த முன்னெடுப்பைக் கண்காணிப்பதற்காக அண்ணா அறிவாலயத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைத்துள்ள ‘வார் ரூம் ஐ திறந்து வைத்தேன். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையில், இதுவரை 49 லட்சத்து 11,090 புதிய உறுப்பினர்கள் உட்பட 77 லட்சத்து 34,937 பேர் தமிழகத்தின் மண், மொழி, மானம் காக்க திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தினர் 41 சதவீதம் வாக்காளர்களைஉறுப்பினர்களாகச் சேர்த்து முன்னணி வகிக்கின்றனர். அவர்களை முந்தும் வகையில் பிற மாவட்டத்தினரும் மும்முரம் காட்ட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.