மதுரை: திமுகவினர் நடத்தும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையின்போது, பொதுமக்களிடம் ஆதார் விவரங்களை சேகரிக்க தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த ராஜ்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவின் விவரம்: ‘தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுக ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நடத்தி வருகிறது. இதற்காக திமுகவினர் அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று, தொந்தரவு அளித்து வருகின்றனர். முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் திடீரென திமுகவினர் வீடுகளுக்கு வருவதால், மக்களின் தனியுரிமை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், திமுகவினர் பொதுமக்களிடம் பல்வேறு ஆவணங்களைக் கேட்டு துன்புறுத்துகின்றனர். எங்கள் வீட்டுக்கு வந்த திமுகவினர், எங்கள் அனுமதி இல்லாமல் வீட்டில் தமிழக முதல்வர் படத்துடன் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்று அச்சிடப்பட்ட சுவரொட்டியை ஒட்டினர். பின்னர், குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் பிற அடையாள அட்டைகளை கேட்டனர்.
ஆவணங்களை தர மறுத்தபோது, வீட்டுப் பெண்கள் மாதந்தோறும் அரசிடம் பெற்று வரும் ஆயிரம் ரூபாயை நிறுத்தி விடுவதாக மிரட்டினர். மேலும், அனைவரின் தனிப்பட்ட செல்போன் எண்களையும் கேட்கின்றனர். அந்த எண்ணைப் பயன்படுத்தி, திமுகவில் உறுப்பினர்களாக சேர்க்கின்றனர். மக்களை திமுகவில் சேர வற்புறுத்தி வருகின்றனர். திமுகவில் சேராமல் போனால் தற்போது பெற்று வரும் அரசு திட்டங்கள் நிறுத்தப்படும் என்கின்றனர். இதனால் மக்கள் பலர் விருப்பமில்லாமல் கட்டாயத்தின் பேரில் தனிப்பட்ட தகவல்களைப் அளிப்பதுடன், திமுகவில் சேருகின்றனர்.
அரசியல் நோக்கங்களுக்காக ஆதார் தகவல்களைச் சேகரிக்க எந்த அரசியல் கட்சிக்கும் ஆதார் அமைப்பு அனுமதி வழங்கவில்லை. அரசியல் பிரச்சாரத்துக்காக ஆதார் போன்ற தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்துவது தவறானது. இது தேர்தல் நடைமுறையை கேள்விக்குறியாக்கும் செயலாகும். மேலும், இந்த நடவடிக்கை தேர்தல் சட்டங்கள் மற்றும் நடத்தை விதிகளை மீறுவதாகும். தனிப்பட்ட விவரங்களை கோருவது இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள், சுதந்திரம் மற்றும் தனி உரிமைகளை மீறுவதாகும்.
எனவே, திமுகவினர் அரசியல் பிரசாரத்துக்காக பொதுமக்களிடமும் இருந்து ஆதார் விவரங்களை சேகரிப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்று அறிவிக்க வேண்டும். மக்களிடம் இருந்து ஆதார் விபரங்களை சேகரிக்கக் கூடாது, இதுவரை சேகரித்த ஆதார் மற்றும் தனிப்பட்ட விபரங்களை உடனடியாக அழிக்க வேண்டும், இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் ஆதார் தலைமை செயல் அதிகாரி விசாரணை நடத்தி, திமுக பொதுச் செயலாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.