சென்னை: ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை 50 லட்சத்தை தாண்டி வெற்றியை நோக்கி பயணிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற திமுக உறுப்பினர் சேர்க்கை பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜூலை 1-ம் தேதி தொடங்கி வைத்தார். வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து 45 நாட்கள் வீடு வீடாகச் சென்று, 30 சதவீதம் பேரை உறுப்பினர்களாகச் சேர்க்கும் பணியை மேற்கொள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த உறுப்பினர் சேர்க்கை பணிகள் ஜூலை 3-ம் தேதி தீவிரமடைந்துள்ளது. அந்தவகையில், கடந்த 7 நாட்களில் தமிழகம் முழுவதும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “ஐம்பது லட்சம் உறுப்பினர்களைக் கடந்து ‘ஓரணியில் தமிழ்நாடு’ மாபெரும் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இன்று (நேற்று) காலை திருவாரூரில் தலைவர் கருணாநிதி வாழ்ந்த சந்நிதி தெருவில் நானும் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டேன்.
தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்று வரும் இந்த முன்னெடுப்பில், 54,310 புதிய உறுப்பினர்கள், 30,975 குடும்பங்களையும் திமுகவில் இணைத்து முதலிடத்தில் முந்தியுள்ளது திருச்சுழி சட்டப்பேரவை தொகுதி. மாவட்டச் செயலாளர் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்.
திருச்சுழியை முந்திச்செல்ல களத்தில் பணியாற்றும் அனைவருக்கும் என் வாழ்த்துகள். உங்கள் அனைவரது உழைப்பால் நம் இலக்கை நிச்சயம் எட்டுவோம். வெற்றி விழாவில் சந்திப்போம்” என்று அவர் கூறியுள்ளார்.