சென்னை: ஓய்வுக்கால பலன்களை வழங்குவது உள்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி, போக்குவரத்து ஊழியர்கள் சென்னை வடபழனி உள்பட பல்வேறு பணிமனைகளில் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு போக்குவரத்து கழகங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு பணப் பலன் வழங்க வேண்டும்; பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு சார்பில், தமிழகம் முழுவதும் கடந்த மாதம் ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, சென்னையில் அயனாவரம், வடபழனி உள்பட அனைத்து பணிமனைகளில் போக்குவரத்து தொழிலாளர்கள் 43-வது நாளாக திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, வடபழனி உள்பட சில பணிமனையில் வாயில் கருப்பு துணி கட்டி நூதன ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். சிஐடியு மாநகர போக்குவரத்துக் கழக பிரிவு தலைவர் துரை, பொதுச்செயலாளர் தயானந்தம், பொருளாளர் பாலாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இது குறித்து, போக்குவரத்து ஊழியர்கள் கூறுகையில்,”போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்று, உறுதி அளிக்கும் வரையில் எங்களது போராட்டம் தொடரும். ஓய்வூதியர்களுக்கான பணப் பலன் எப்போது வழங்கப்படும் என்பதற்கான உத்தரவாதத்தையாவது அளிக்க வேண்டும்” என்று போக்குவரத்து ஊழியர்கள் கூறினர்.