சென்னை: ஓய்வு பெற்றவர்களுக்கான 15 மாத ஓய்வுக்கால பணப்பலன்களை தீபாவளிக்குள் வழங்குவது குறித்து, அமைச்சர் நல்ல பதில் சொன்னால் போக்குவரத்து ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் முடிவு பெறும் என, சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் கூறினார்.
தமிழகம் முழுவதும் 2 ஆண்டுகளாக பணி ஓய்வு பெற்ற 3,500 போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள ஓய்வுக்கால பலன்கள், பணியில் உள்ளவர்களுக்கு 2 ஆண்டு ஊதிய ஒப்பந்த நிலுவை தொகை மற்றும் 12 மாத அகவிலைப்படி நிலுவை தொகையை வழங்க வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் ஆக.15-ம் தேதி முதல் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன், தமிழ்நாடு அரசு போக்குவரது உழியர் சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச் செயலாளர் வி.தயானந்தம், ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் தலைவர்கள் நடராஜன், ஆதிமூலம் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர், அ.சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேலை நிறுத்தம் செய்வது முடியாத காரியமல்ல. ஆனால், மக்கள் நலனுக்காக பேருந்து இயக்கம் பாதிக்கப்படக் கூடாது என்பதை கருதி, காத்திருப்பு போராட்டத்தை நடத்துகிறோம். இந்த நல்லெண்ணத்தை புரிந்து கொண்டு அரசு பிரச்சினையை தீர்க்க முன்வர வேண்டும்.
ஓய்வு பெற்றவர்களுக்கான 15 மாதகால பணப்பலன்களை தீபாவளிக்குள் வழங்க வேண்டும் என்று அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் கோரியிருக்கிறோம். பணியில் இருப்பவர்களுக்கான நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தியபோது, ஒருவாரத்திற்குள் தர ஏற்பாடு செய்வதாக அமைச்சர் கூறினார்.
ஓய்வுபெற்றவர்களின் அகவிலைப்படி, 2003-க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு, அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து விட்டு தெரிவிப்பதாக அமைச்சர் கூறியுள்ளார். நல்லபதில் சொல்வார் என்று எதிர்பார்க்கிறோம். நல்ல பதில் சொன்னால் போராட்டம் முடிவுக்கு வரும். இல்லாவிட்டால் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.