மன்னார்குடி: ஓபிஎஸ்-ஐ மீண்டும் பாஜக கூட்டணியில் சேர்க்க முயற்சி செய்ய வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அமமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற டிடிவி தினகரன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதை விட்டுவிட்டு, பிள்ளை பிடிப்பதைபோல மற்ற கட்சிகளில் இருந்து ஆட்களை பிடிக்கும் வேலையை திமுக அரசு செய்து வருகிறது. தமிழகத்தில் யார் உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை நிலவி வருகிறது.
பாஜக கூட்டணியை விட்டு ஓபிஎஸ் விலகிச் சென்றது கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அவர் விலகி சென்றதற்கு காரணமானவர்கள், அவரை மீண்டும் கூட்டணியில் சேர்க்க முயற்சி எடுக்க வேண்டும். மேலும், தேசிய ஜனநாயக கூட்டணி ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். கூட்டணியில் உள்ள கட்சிகள் வெளியேறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கூட்டணியில் உள்ள அரசியல் கட்சியினரை திமுக கபளீகரம் செய்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வராக அமித் ஷா யாரை அறிவிக்கின்றாரோ, அந்த நபர் அமமுக ஏற்றுக்கொள்கின்ற நபராக இருக்கும்பட்சத்தில் அந்த முதல்வரை ஆதரிப்போம். பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஜெயலலிதாவின் தொண்டராக இருந்தவர். அதே மனநிலையில்தான் இன்றும் இருக்கிறார். அதேநேரத்தில், அதிமுக தொண்டர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா உடன் எவர் ஒருவரையும் ஒப்பிட்டு பேசுவதை விரும்ப மாட்டார்கள்.
இந்தியாவின் பல மாநிலங்களிலும் தமிழர்கள் சென்று குடியேறி இருக்கின்றனர். அங்கு அவர்களுக்கு ரேஷன் கார்டு கொடுக்கப்பட்டு வாக்காளர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதைபோல, தமிழகத்திலும் வெளிமாநிலத்தவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் குளறுபடி நடப்பதற்கு என்ன இருக்கிறது என்று புரியவில்லை” என்று அவர் தெரிவித்தார்.