ஓபிஎஸ், டிடிவி.தினகரன் கூட்டணிக்கு வந்தால் சேர்த்துக்கொள்வோம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டதை நாடு முழுவதும் மக்கள் வரவேற்றுள்ளனர். பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி பேசி வருகிறார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் வாக்குத் திருட்டு நடந்துள்ளது. நாங்கள் வாக்குத் திருட்டு செய்திருந்தால் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றிருக்க முடியாது.
தமிழக மீனவர்கள் பிரச்சினையில் பாஜகவை விமர்சித்து விஜய் பேசி உள்ளார். திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி என்றும் அவர் கூறி வருகிறார். அவர் இதுவரை எந்த தேர்தலையும் சந்தித்தது இல்லை. இப்போதுதான் வந்திருக்கிறார். வந்தவுடன் ஆட்சிக்கு வந்து விடுவோம் என நினைக்கிறார். ஆனால், தமிழக மக்கள் அவருக்கு வாக்களிப்பார்களா என சிந்தித்து பார்க்க வேண்டும்.
அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப்போவதாக தகவல் பரவுகிறது. அவர் எங்கள் கட்சியின் முன்னாள் தலைவர். இப்போதும் கட்சியில் தான் இருக்கிறார். இதுபோன்ற தகவலை பரப்புவது ஊடகத்தினரா அல்லது திமுகவினரா என தெரிய வில்லை. அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப் போவதாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதை யார் ஒட்டினர் என தெரிய வில்லை. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ளது. அதிமுக உட்கட்சி பிரச்சினையில் நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.
ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன் உள்ளிட்டோர் மீண்டும் கூட்டணிக்கு வந்தால் சேர்த்துக்கொள்வோம். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நண்பரும் இல்லை. திமுக கூட்டணி, கொள்கை அளவிலான கூட்டணி இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.