ஈரோடு: அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க 10 நாட்களில் முயற்சி எடுக்க வேண்டும் என்று கட்சித் தலைமைக்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்து வரும் முன்னாள் அமைச்சர் செங் கோட்டையன், செப்.5-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து மனம்திறந்து பேச உள்ளதாக கூறியிருந்தார். அதன்படி, ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கட்சி உடைந்து விடக்கூடாது என்பதற்காக, அனைவரும் இணைந்து, அன்றைய பொதுச் செயலாளராக சசிகலாவை ஒருமனதாக நியமித்தோம். அதற்குப் பிறகு, யார் முதல்வர் என்ற நிலை வந்தபோது, முதல்வராக பழனிசாமியை சசிகலா முன்மொழிந்தார்.
அந்த நேரத்தில், எனக்கு 2 வாய்ப்புகள் கிடைத்தன. அதிமுக உடைந்து விட கூடாது என்ற நோக்கத்தில், அதை மறுத்து விட்டேன். அதிமுகவுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன்.
பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு, நடந்த பல தேர்தல்களில் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. 2024 மக்களவை தேர்தலின்போது, பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்திருந்தால், 30 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க முடியும்.
இந்த நிலையில், மக்களவை தேர்தல் முடிந்த பிறகு, முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, அன்பழகன், சி.வி.சண்முகம் இவர்களோடு நானும், கட்சியின் பொதுச் செயலாளரான பழனிசாமியை சந்தித்தோம். அப்போது, ‘‘கட்சி தொய்வடைந்துள்ளது. தேர்தல் களத்தில் நாம் எவ்வளவு வியூகம் வகுத்தாலும், வெற்றி பெற இயலவில்லை. எனவே, கட்சியில் இருந்து வெளியே சென்றவர்களை இணைக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்தோம். ஆனால், எங்கள் கருத்துகளை ஏற்கும் மனநிலையில் அவர் இல்லை.
நம்மைவிட்டு வெளியே சென்றவர்களை, ‘மறப்போம் மன்னிப்போம்’ என்ற எண்ணத்துடன் அரவணைத்தால்தான் தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியும். இது எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் கற்றுத் தந்த பாடம்.
தவிர, அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்துவிட்டு, வெளியே சென்றவர்கள், தற்போது எந்த நிபந்தனையும் இல்லாமல், இணையத் தயாராக உள்ளனர்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதற்கு, வெளியே சென்றவர்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும். யார் யாரை இணைக்க வேண்டும் என் பதை பொதுச் செயலாளர் முடிவு செய்யலாம். மேலும், இதற்கான முயற்சியை 10 நாளில் எடுக்க வேண்டும்.
கட்சித் தலைமை இதை செய்யாவிட்டால், இந்த மனநிலையில் உள்ள அனைவரும் ஒருங்கிணைந்து, அதற்கான பணிகளை மேற்கொள்வோம். இந்த கோரிக்கைக்கு முடிவு வந்தால்தான், பழனிசாமியின் பிரச்சார பயணத்தில் பங்கேற்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, கோபியில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வந்த செங்கோட்டையனுக்கு தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதிமுகவில் இருந்து பல்வேறு காலகட்டங்களில் ஓரம்கட்டப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் சேர்க்குமாறு கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் வலியுறுத்தி இருப்பது, எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.