புதுக்கோட்டை: “முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அரசியல் வாழ்கை முடிவா, ஆரம்பமா என்பது போகப்போகத்தான் தெரியும்.” என மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மாநில அரசு சார்பில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சித் திட்டங்களை உள்ளடக்கி செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட 4 ஆண்டு சாதனை மலரை ஆட்சியர் எம்.அருணா தலைமையில் இன்று (ஆக.2) நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் வெளியிட்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் எஸ்.ரகுபதி கூறியவாது: திமுக அரசு எதையும் செய்யாததைப் போன்று முன்னாள் முதல்வர் பழனிசாமி விமர்சித்துப் பேசி வருகிறார். அவரால் சாதனை மலர் வெளியிட முடியாது. வேதனை மலர்தான் வெளியிட முடியும்.
திமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்கள் அனைத்துமே புதிய திட்டங்கள். இவற்றில் ஒரு திட்டதையாவது அதிமுக ஆட்சியில் தொடங்கி இருந்தால்கூட உரிமை கொண்டாடலாம். அவர் எதையும் செய்யவில்லை என்பதால் உரிமை கொண்டாட முடியாது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து இருப்பது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான். இவர்களை திமுக கூட்டணியில் இணைப்பது குறித்து திமுக தலைவர் முடிவெடுப்பார்.
திமுகவோடு ஏற்கெனவே கூட்டணியில் உள்ள கட்சிகள் கூடுதல் ‘சீட்’-களை கேட்டு வரும் நிலையில், புதிய கட்சிகள் திமுக கூட்டணியில் இணைவதால் தொகுதிப் பங்கீட்டில் பிரச்சினை வரலாம் என்பதையெல்லாம் திமுக தலைவர் பார்த்துக் கொள்வார்.
திட்டங்களுக்கு ஸ்டாலின் பெயரை வைக்கக் கூடாது என்ற உயர் நீதிமன்றத்தின் கருத்து குறித்து தமிழக அரசின் வழக்கறிஞர்கள் 2 நாட்களில் நீதிமன்றத்தில் பதில் அளிப்பார்கள்.
பாஜகவோடு அதிமுக கூட்டணி வைத்துக் கொள்ளட்டும். அதற்காக பாஜகவை மதவாத கட்சி அல்ல என்று பழனிசாமி ஏற்றுக்கொண்டால் அதைப் போன்ற ஒரு துரோம் வேறு ஏதும் இருக்க முடியாது.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு அரசியல் வாழ்க்கை முடிவா, ஆரம்பமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க முடியும். யாருடைய அரசியல் வாழ்க்கையும் எப்படி இருக்கும் என்பது போகப்போக தான் தெரியும்தே தவிர, உடனே தெரியாது.
திமுக மீது பழனிசாமி வைத்துள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய் என்பதை நிரூபித்து வரும் 2026 தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
திருமயம் தொகுதியில் நான் செய்ததைப் போன்று வேறு எவரும் எந்தத் திட்டத்தையும் செய்யவில்லை. திமுக தலைவர் அனுமதித்தால் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் பேசுவேன்.
கனிமவ வளத்துறையில் கவனமாக கையாளாவிட்டால் மாட்டிக்கொள்வீர்கள் என பழனிசாமி எனக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் ஏற்கெனவே, எனக்கு நன்கு அனுபவம் உள்ளது. தவறு செய்ய மாட்டோம். மாட்டிக்கொள்ளவும் மாட்டோம். பிற மாநில வாக்காளர்களை தமிழகத்துக்கு கொண்டு வருவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.