சென்னை: “இத்தனை ஆண்டுகள் பணிபுரிந்த எங்களை இன்று குப்பை போல வீசுகிறார்கள். எங்கள் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கேட்கிறோம். ஓட்டு வாங்கியதற்குப் பிறகு வாக்கு மாறிவிடுமா?” என்று சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் கொந்தளிப்புடன் கூறினர்.
இது குறித்து தூய்மைப் பணியாளர்கள் கூறும்போது, “நிரந்தரப் பணி வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை. முன்னர், எங்களை கையெடுத்து கும்பிட்டார்கள், காலில் விழுந்து கும்பிட்டார்கள். நாங்கள்தான் பெரிய ஆளு என்று தெரிவித்தனர். ஆனால், இப்போது நாங்கள் குப்பைக்காரர்கள் ஆகிவிட்டோம். மேயர் பிரியாவும் எங்களைப் போன்ற ஒரு பெண்தானே. அவருக்கு எங்களின் கஷ்டம் தெரியாதா? அமைச்சர் சேகர்பாபு வருகிறார், பேட்டி கொடுக்கிறார் அவ்வளவுதான்.
எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் மண்ணெண்ணெய் வாங்கிக் கொண்டு வந்து தீக்குளிப்போம். 14, 15 வருடங்களாக பணிபுரிந்து வருகிறோம். தற்போது திடீரென வந்து தனியாருக்கு விடப் போகிறோம் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? கரோனா காலத்தில் பல்வேறு இன்னல்களை சந்தித்தோம். வீட்டுக்குள் கூட சிலர் அனுமதிக்க மாட்டார்கள்.
இந்த வேலையை நம்பிதான் நாங்கள் கடன் வாங்குகின்றோம். இத்தனை ஆண்டுகள் பணிபுரிந்த எங்களை இன்று கருவேப்பிலையை தூக்கிப் போடுகிறார்கள். குப்பை போல வீசுகிறார்கள். சொத்து, வீடு வாசல் போன்ற எதையும் நாங்கள் கேட்கவில்லை. நாங்கள் செய்யும் பணியை மட்டும் நிரந்தரம் செய்ய வேண்டும். அவ்வளவுதான்.
ஓட்டு வாங்கியதற்குப் பிறகு வாக்கு மாறிவிடுமா? அமைச்சர் சேகர் பாபு மற்றும் மேயர் பிரியாவிடம் கேட்கலாம் என்று முதல்வர் கூறுகிறார். அதில் யார் முதல்வர்? முதல்வர் கூறுவதை தானே இவர்கள் கேட்க வேண்டும். முதல்வர் ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார், ஆனால் நாங்கள் பிளாட்பாரத்தில் இருக்கிறோம்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போல இந்தப் போராட்டமும் நடக்கும். எங்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம். முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு நல்ல முடிவு சொன்னால் அவரை வரவேற்போம். இல்லையென்றால் அவரை வரவேற்க மாட்டோம். இதுதான் உண்மை. எங்களுடைய சோற்றை பறித்தவருக்கு எப்படி ஓட்டு போடுவோம்?” என்று தெரிவித்துள்ளனர். காண்க…
11-வது நாளாக போராட்டம்: சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாரிடம் கொடுத்ததைக் கண்டித்தும், பணி நிரந்தரம் கோரியும், ஏற்கெனவே என்யூஎல்எம் திட்டம் மூலம் வழங்கப்பட்ட தூய்மைப் பணியை தொடர வலியுறுத்தியும் தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் மாளிகை முன்பு இரவு, பகலாக அங்கேயே தங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஏழு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில், இன்றும் 11-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இவர்களை இன்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து, கோரிக்கைகளை கேட்டறிந்தார். அது குறித்து முதல்வரிடம் தெரிவித்து, உரிய தீர்வுகாண உதவுவதாக உறுதியளித்தார்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் இன்று தூய்மைப் பணியாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அவர் கூறும்போது, “அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி, அவர்களுக்கு நிரந்தரப் பணி வழங்க வேண்டும். அவர்களின் கோரிக்கைகளுக்கு நாங்கள் துணை நிற்போம். அமைச்சர்கள் வந்து பேசுகிறார்களே தவிர, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. மனிதாபிமான அடிப்படையில் பிரச்சினைக்கு அரசு முடிவுகட்ட வேண்டும். போராடுபவர்களின் கோரிக்கை நியாயமானதுதான்” என்றார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்றும் தூய்மைப் பணியாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அவர்களுக்கு மதிய உணவும் வழங்கினார். அதிமுக சார்பில், முன்னாள் எம்பி பாலகங்கா தலைமையில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. தவெக தலைவர் விஜய் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தூய்மைப் பணியாளர்களை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வரவழைத்து, அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்து அவர்களுக்கான தனது ஆதரவையும் தெரிவித்தார்.