ஓசூரில் செயல்படும் 2 அம்மா உணவகங்களை மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், தரமற்ற உணவு, பாதுகாப்பற்ற குடிநீர் வழங்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஓசூர் பேருந்து நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை அருகே ஏரித்தெரு ஆகிய 2 இடங்களில் மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இங்கு மலிவான விலையில் உணவுகள் வழங்கப்படுவதால், ஏழை எளிய மக்களின் பசிப்பிணி போக்கும் உணவகமாக உள்ளது. இங்கு தினமும் ஏராளமான தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் உணவுகளைச் சாப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில், 2 உணவகங்களையும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை எனவும், இதனால், தரமான உணவு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், இங்கு பொதுமக்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் வழங்கும் வகையில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டது. இந்த சுத்திகரிப்பு இயந்திரம் பழுதாகிப் பல ஆண்டுகளான நிலையில் சீர் செய்யப்படாமல் உள்ளது. இதனால், அங்குள்ள சின்டெக்ஸ் டேக்கில் நிரப்பியுள்ள தண்ணீர் குடிக்க வழங்கப்படுவதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பொதுமக்கள் கூறியதாவது: ஓசூர் மாநகராட்சி பகுதியில் செயல்படும் 2 அம்மா உணவகங்கள் மூலம் தொழிலாளர்கள் பயன் அடைந்து வருகின்றனர். குறிப்பாக பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகத்தில் பேருந்து நிலையத்துக்கும் வரும் ஏழை மக்களும், ஏரித்தெருவில் உள்ள அம்மா உணவகத்தில் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் சாப்பிட்டு வருகின்றனர். ஆனால், இங்கு தரமில்லாமல் உணவு வழங்கப்படுகிறது. அதேபோல, 2 உணவகங்களிலும் பல லட்சம் ரூபாய் செலவு செய்து, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்டன. அவை முறையான பராமரிப்பின்று பழுதாகிவிட்டன. அதை சீரமைக்க நடவடிக்கை இல்லை.
கை கழுவ வைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் தொட்டி தண்ணீரைத்தான் குடிநீர் பயன்பாட்டுக்கும் வழங்கி வருகின்றனர். தூசி படிந்துள்ள தொட்டியில் வாரம் ஒருமுறை தண்ணீர் நிரப்பப்படுகிறது. இக்குடிநீரைக் குடிக்கும் முதியவர்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன. வேறு வழியில்லாமல் மலிவு விலையில் உணவு கிடைப்பதால் வாங்கிச் சாப்பிட்டு வருகிறோம். பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகத்தில் கை கழுவும் பகுதியில் குப்பைக் கழிவுகள் மற்றும் கழிவுநீர் தேங்கி சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இத்தனை பிரச்சினைகள் இருந்தபோதும் உணவகங்களை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை
எனவே, அம்மா உணவகங்களை ஆய்வு செய்து தரமான உணவு மற்றும் பாதுகாப்பான குடிநீர் வழங்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.