ஓசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை 3 மாதங்களில் தெரு நாய்கள் கடித்து 446 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில், நாய்களை கட்டுப்படுத்த நோயுற்ற நாய்களை கருணை கொலை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
ஓசூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகள் மற்றும் அதனைச் சுற்றி உள்ள ஊராட்சிக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இத்தெரு நாய்கள் சாலையோரங்களில் வீசப்படும் இறைச்சிக் கழிவுகளைச் சாப்பிட கூட்டம், கூட்டமாகச் சாலைகளில் சுற்றித் திரிகின்றன.
அப்போது, நாய்களுக்கு இடையில் ஏற்பட்டும் மோதல் காரணமாக கூட்டம் சாலையில் குறுக்கிடும்போது, இருசக்கர வாகனங்கள் மீது மோதி, வாகன ஓட்டிகள் சாலையில் விழுந்து அடிபட்டுச் செல்வதும், நாய் கடிக்கு ஆளாகும் நிலையும் உள்ளது. மேலும், தெருக்களிலும் சுற்றும் நாய்கள் தெருவில் நடந்து செல்லும் சிறுவர்கள் மற்றும் முதியவர்களைத் துரத்திக் கடிப்பது அதிகரித்து வருகிறது. மேலும், நாய் கடிக்கும் முறையான சிகிச்சை பெறாமல் ஓசூரில் சிலர் உயிரிழந்த சம்பவமும் நடந்தது.
இதனிடையே, ஓசூர் மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை 3 மாதங்களில் தெரு நாய்கள் கடித்து 446 பேர் பாதிக்கப்பட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர் என அரசு மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பொதுமக்கள் சிலர் கூறியதாவது: தெரு நாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுத்தாலும், அவற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அச்சுறுத்தும் நாய்களால் தெருக்கள் மற்றும் சாலைகளில் நடந்து செல்ல முடியாத நிலையுள்ளது. இருசக்கர வாகனங்களில் சென்றாலும், வாகன இரைச்சல் சத்தத்துக்கு நாய்கள் துரத்துகின்றன. நாய்கடிக்குப் பயந்து வாகனத்தை வேகமாக இயக்கி கீழே விழுந்து அடிப்பட்டு தினசரி பலர் செல்வது வேதனையாக உள்ளது.
தமிழக அரசு நோயுற்ற தெரு நாய்களைக் கருணைக் கொலை செய்ய தற்போது அனுமதி அளித்துள்ளது. எனவே, மாநகராட்சி நிர்வாகம் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யவும், நோயுற்ற நாய்களைக் கருணைக் கொலை செய்யவும் உரிய நடவடிக்கை எடுத்து, தெரு நாய்களின் அச்சுறுத்தலிலிருந்து பொதுமக்களை காக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
விளையாட்டாகக் கருதும் நாய்கள்: தெரு நாய்கள் இயல்புகள் தொடர்பாகக் கால்நடை மருத்துவர்கள் கூறியதாவது: ஓசூர் நகரில் நாய்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், அவற்றின் வாழ்விட பரப்பளவு குறைந்துள்ளது. ஒவ்வொரு நாயும் தன் எல்லையை வரையறுத்துக் கொள்கின்றன. தங்கள் பகுதியைப் பாதுகாப்பது கடினமாகும் போது, நாய்கள் பாதுகாப்பின்மையை உணரத் தொடங்குகின்றன. மனிதர்கள் தங்கள் பகுதிக்குள் நுழைகிறான் என் நினைக்கத் தொடங்குகின்றன.
அப்போது, அவை ஆக்ரோஷமாக எதிர்க்கிறது. சில நேரங்களில் பயமுறுத்துவதை விளையாட்டாக பார்க்கின்றன. நாய் ஒருவரை ஓட வைக்கிறது என்றால், அவருக்கு அச்சம் ஏற்படுகிறது என்பதை உணர்ந்து, அதை அவை விளையாட்டுபோல நினைத்துக் கடிக்கின்றன. சில நேரங்களில் இனக்கட்டுப்பாடு செய்த நாய்கள் இனச்சேர்க்கை இல்லாததாலும், தனது உடல் மீது உள்ள அரிப்பைத் தானே வாயால் கடிக்கும் போதும் அவைகளுக்கு ஒருவிதமான மன அழுத்தங்கள் ஏற்படும்.
அந்த வெறுப்பை மனிதர்கள் மீது காட்டி விடுகிறது. நாய் கடித்த உடன் அருகே உள்ள அரசு மருத்துவ மனைகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் உயிரிழக்க நேரிடம். இவ்வாறு அவர்கள் கூறினர்.