சென்னை: தமாகா நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் 24-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் நேற்று மலர்வளையம் வைத்தும், மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோர் மூப்பனார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தனர். அப்போது, பின்னால் நின்றிருந்த அண்ணாமலையை அருகில் வந்து நிற்குமாறு பழனிசாமி அழைத்தார். பின்னர், நினைவிடத்தை சுற்றி வருவதற்கு பழனிசாமியை அண்ணாமலை அழைத்துச் சென்றார். தொடர்ந்து, இருவரும் மேடையில் அருகருகே அமர்ந்திருந்தனர். பின்னர், பழனிசாமி புறப்பட்டுச் செல்லும்போது, அண்ணாமாலைக்கு கைகொடுத்து விட்டுச் சென்றார்.
இந்த நிகழ்வில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசும்போது, “2026 சட்டப்பேரவையில் மாற்றம் வேண்டும் என்று எல்லோரும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி முதல்வர் வேட்பாளர் பழனிசாமி, முதல்வர் நாற்காலியில் அமர்வார். மாற்றமும், புரட்சியும் ஏற்பட்டு, ஏழைகளுக்கு விடிவெள்ளி அரசு உருவாகட்டும்” என்றார்.
பாஜக தலைவராக அண்ணாமலை இருந்தபோது, அதிமுக மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். இதனால், பழனிசாமி – அண்ணாமலை இடையே மோதல் போக்கு நிலவியது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், பழனிசாமி – அண்ணமலை இருவரும் ஒன்றாக இருந்தது. அதிமுக – பாஜக இடையிலான நெருக்கம் அதிகரித்துள்ளதை காட்டுகிறது என்று இருகட்சித் தொண்டர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.