ராஜபாளையம்: “அதிமுகவுக்கு கொள்கை வேறு, கூட்டணி வேறு. திமுக கூட்டணிக்கு ஒரே கொள்கை என்றால், அதன் கூட்டணி கட்சிகள் அனைத்தும் திமுகவுடன் இணைத்து விடலாமே” என்று ராஜபாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி பேசினார்.
அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். இரண்டாம் கட்ட சுற்றுப் பயணத்தில் இன்று மாலை ராஜபாளையம், ஶ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி தொகுதியில் சுற்றுப் பயணம் செய்தார். ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் முன் பேருந்தில் நின்றவாறு பேசிய பழனிசாமி பேசியது: ”ஸ்டாலின் தங்கள் கூட்டணி வலுவானது என கூறி வருகிறார். உங்களுக்கு கூட்டணி வலிமை, எங்களுக்கு மக்கள் வலிமை. ஸ்டாலின் கனவு பலிக்காது. மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டனர்.
2011 – 2021 வரையிலான அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி என மக்கள் கூறுகின்றனர். 50 மாத கால திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டால் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை என்ற நிலை உள்ளது. தேர்தலை மக்கள் எதிர்நோக்கி காத்துள்ளனர். எங்கள் ஆட்சியை திமுகவால் விமர்சனம் செய்ய முடியவில்லை.
திமுகவுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்டது கம்யூனிஸ்ட். சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் கம்யூனிஸ்ட் திமுகவை எதிர்த்து பேசுவதில்லை. திமுக கூட்டணி தலைவர்கள் என்ன பேச வேண்டும் என ஸ்டாலினிடம் அனுமதி பெற்று பேசுகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் எங்களுக்கு என்ன கொள்கை என கேட்கிறார். உங்களிடம் கொள்கை இல்லாததால் மக்கள் செல்வாக்கை இழந்து உள்ளீர்கள்.
அதிமுகவுக்கு கொள்கை வேறு, கூட்டணி வேறு. மத்திய ஆட்சியை அகற்ற வேண்டும் என இண்டியா கூட்டணி அமைத்து உள்ளனர். அவர்களுக்கு என்ன ஒரே கொள்கையா? இது சந்தர்ப்பவாத கூட்டணி. திமுக கூட்டணியில் ஒரே கொள்கை என்றால், அனைத்து கூட்டணி கட்சிகளும் திமுகவில் இணைத்து கொள்ளலாம். இனியும் அதிமுக கூட்டணி குறித்து திமுக கூட்டணி கட்சியினர் பேசினால், ராஜேந்திர பாலாஜி போன்றவர்கள் பதிலடி கொடுப்பர்.
அதிமுக ஆட்சியில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்துக்கு வந்த ஸ்டாலின், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்கள் பிரச்சினையை தீர்ப்போம் என்றார். தேர்தல் அறிக்கையில் அறிவித்தார். இப்போது 6 நாட்களாக தூய்மை பணியாளர்கள் போராடி வருவதை யாரும் கண்டு கொள்ளவில்லை. அரசு ஊழியர்கள், செவிலியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், டெல்டா மாவட்டத்தில் பாதிக்கபட்ட விவசாயிகள் போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் குரல் கொடுக்கவில்லை.
கருணாநிதி ஆட்சியில் ஊழல் குறித்து எம்ஜிஆர் புகார் கொடுக்க சென்றபோது, கம்யுனிஸ்ட் தலைவர்கள் ராமமூர்த்தி உள்ளிட்டோர் உடன் சென்றனர். அவர்கள் தான் உண்மையான கம்யூனிஸ்ட்டுகள். திமுகவின் தவறுகளை கம்யூனிஸ்ட்டுகள் சுமக்க வேண்டாம். கம்யூனிஸ்ட்டுகள் மீது மரியாதை இருப்பதால் இத்துடன் நிறுத்தி கொள்கிறேன். ராஜபாளையம் நகராட்சியில் வீட்டு வரி 100 சதவீதமும், வணிக கடைகளுக்கு 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. வரி மேல் வரி போட்ட அரசாங்கம் தொடர வேண்டுமா?
பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் இந்தியாவின் முதன்மை மாநிலம் என ஸ்டாலின் கூறுகிறார். பொருளாதார வளர்ச்சி என்பது மாறி மாறி வரும். உயரும்போது ஆரவாரம் செய்பவர்கள், குறையும்போது அமைதியாகி விடுகின்றனர். மக்களுக்கு பரிசுத் தொகை உடன் பொங்கல் தொகுப்பு வழங்கியது அதிமுக. பொங்கல் தொகுப்பில் ஊழல் செய்தது திமுக.
புதிய தொழில்கள் தொடங்கி லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்து உள்ளது என ஸ்டாலின் கூறுவது பச்சைப் பொய். தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்டோம், இதுவரை திமுக அரசு வெளியிடவில்லை. அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட தொழில்கள் மூலம்தான் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. திமுக ஆட்சியில் போடப்பட்ட புரிந்துண்ணர்வு ஒப்பந்தம் மூலம் ஒரு தொழில் கூட இதுவரை தொடங்கப்படவில்லை.
தமிழக அரசில் காலியாக உள்ள 5.5 லட்சம் காலியிடம் நிரப்படும் என தேர்தல் அறிக்கையில் திமுக கூறியது. சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 50 ஆயிரம் அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டதாக கூறுகிறார். ஆனால் 4 ஆண்டுகளில் ஓய்வு பெற்றவர்கள் 75 ஆயிரம் பேர். தற்போது காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை 5.75 லட்சமாக உயர்ந்துள்ளது.
நிதி மேலாண்மை எனக் கூறி வந்துவிட்டு, நிபுணர்கள் குழு அமைத்து அலசி ஆராய்ந்து ரூ.4.38 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டு உள்ளது. கடன் வாங்கவே நிபுணர்கள் குழு அமைத்து உள்ளனர். இந்த ஆண்டு ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்க திட்டமிட்டு உள்ளனர். தமிழக மக்களை கடனாளிகளாக மாற்றியதே திமுக அரசின் சாதனை. குடும்ப ஆட்சி, வாரிசு அரசியல் உள்ள திமுக மக்களை ஏமாற்றுகிறது.
அதிமுக நேர் வழியில் ஆட்சி செய்து மக்களிடம் நன் மதிப்பைப் பெற்று உள்ளோம். கரோனா காலத்தில் வருவாய் இல்லாத போதிலும் மக்களை காப்பாற்றியது அதிமுக ஆட்சி. தினசரி 7 லட்சம் பேருக்கு இலவசமாக உணவு அளித்து அதிமுக. கரோனா காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆல் பாஸ் வழங்கி மாணவர்களையும் பிரச்சினை இல்லாமல் பார்த்து கொண்டது அதிமுக. அதிமுக ஆட்சி அமைந்த உடன் பெண்களுக்கு அற்புதமான சேலை, ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும்.
ராஜபாளையம் தொகுதியில் கூட்டணி வேட்பாளருக்கு அமோக ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். எங்கள் கூட்டணி வெற்றி பெற்று அதிமுக தனிப் பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்கும்” என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அதன்பின், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரடியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியது: “ஶ்ரீவில்லிபுத்தூர் விவசாயம், கைத்தறி, பனையேறும் தொழில்கள் நிறைந்த தொகுதி. அதிமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டம் கொண்டு வந்து கண்மாய்களை தூர்வாரினோம். விவசாயத்திற்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம், பயிர்க் காப்பீடு வழங்கப்பட்டது.
கைத்தறி தொழிலாளர்களுக்கு ரூ.300 கோடி மானியம், பசுமை வீடுகள் வழங்கினோம். தேசிய கைத்தறி நாளில் ஶ்ரீவில்லிபுத்தூர் நெசவாளர்களுக்கு வாழ்த்துகள். அதிமுக ஆட்சிக்கு வந்த உடன் பனையேறும் தொழிலாளருக்கு இலவச காப்பீடு மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும். மேலும் தமிழகத்தில் ஏழை என்ற சொல்லே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்.
முதல் கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து எனக் கூறி ஆட்சிக்கு வந்து விட்டு ஏமாற்றியது திமுக. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகளை மூடி விட்டு, தற்போது நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம் கொண்டு வந்துள்ளார்கள். முதல்வர் ஸ்டாலின் அவரது உடல் ஆரோக்கியத்தை முதலில் பேண வேண்டும்.
ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் அதிமுக ஆட்சிக்கு வந்த உடன் 4 ஆயிரம் அம்மா மினி கிளினிக் தொடங்கப்படும். எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, ஊர் ஊராக சென்று மக்களிடம் வாங்கிய கோரிக்கை மனுக்களை தீர்த்து இருந்தால், இப்போது உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தேவை இல்லை. நாங்கள் மக்களை ஏமாற்றவில்லை. செய்ததைத் தான் சொல்கிறோம். இன்னும் 7 மாதம்தான் இந்த ஆட்சிக்கு ஆயுள்” என்று அவர் பேசினார்.
இந்நிகழ்வில், முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார், காமராஜ், பாஜக மாநில துணை தலைவர் கோபால் சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.