2026-ல் விருதுநகர் தொகுதியில் போட்டியிட ஆயத்தமாகி வருகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். ஆனால், அவரோடு முரண்டு பிடித்து நிற்கும் இன்னொரு முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளருமான ராஜேந்திர பாலாஜியோ, “விருதுநகரை கேட்டு வாங்குங்கள்; உங்களை நான் ஜெயிக்க வைக்கிறேன்” என்று பாஜக-வில் இருக்கும் நடிகர் சரத்குமாரை கொம்பு சீவுவதாகச் சொல்கிறார்கள்.
விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக எல்லைக்குள் உள்ள விருதுநகர் தொகுதியில் மாஃபா பாண்டியராஜனும், ராஜபாளையம் தொகுதியில் பாஜக சார்பில், முன்னாள் அதிமுக எம்எல்ஏ-வான கோபால்சாமியும் போட்டியிட ஆயத்தமாகி வருகிறார்கள். இவர்கள் இருவரையுமே தனக்கு ஆகாது என்பதால் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்க ஆயத்தமாகி வருகிறார் ராஜேந்திர பாலாஜி.
இதுகுறித்து நம்மிடம் பேசிய விருதுநகர் மாவட்ட அதிமுக மூத்த நிர்வாகிகள் சிலர், “மாஃபா பாண்டியராஜன் சென்னையை விட்டுவிட்டு மீண்டும் விருதுநகர் அரசியலுக்கு திரும்பியது ராஜேந்திர பாலாஜிக்கு பிடிக்கவே இல்லை. அதனால் அவருக்கு எதிராக பொதுவெளியிலேயே வார்த்தைகளில் மறைமுகமாக வெடித்தார் பாலாஜி. இது தொடர்பாக கட்சித் தலைமை அவரை அழைத்து கண்டித்ததும், ‘நான் பாண்டியராஜனைக் குறிப்பிட்டுப் பேசவில்லை’ என மறுத்தார். பாலாஜி இப்படி மிரட்டல் தொனியில் பேசியது பாண்டியராஜனுக்கு தொழில் ரீதியாகவும் சில சங்கடங்களை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கீழடி அகழாய்வு அறிக்கை திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தில் அதிமுக-வை திமுக கடுமையாக விமர்சனம் செய்தது. அதற்கு, அதிமுக ஆட்சியில் தொல்லியல் துறையை கையில் வைத்திருந்த பாண்டியராஜன் மூலம் பதிலடி கொடுத்தார் இபிஎஸ். திமுக-வின் கேள்விகளுக்கு புள்ளி விவரத்துடன் பாண்டியராஜன் அளித்த பதிலும், அவர் எழுப்பிய எதிர் கேள்விகளும் திமுக-வினரின் வாயை அடைத்தது. இந்த நிலையில், அண்மையில் விருதுநகர் மாவட்டத்துக்கு இபிஎஸ் பிரச்சாரப் பயணம் வந்த போது பாண்டியராஜன் கலந்துகொள்ளவில்லை.
பாண்டியராஜனைப் போலவே அதிமுக-வில் ராஜேந்திர பாலாஜியால் ஓரம்கட்டப்பட்டவர் கோபால்சாமி. அதனால் பாஜக-வில் இணைந்து இப்போது மாநில துணைத் தலைவராக இருக்கிறார். இவர் இம்முறை ராஜபாளையத்தில் போட்டியிட தனது நண்பர் நயினார் மூலம் முயன்று வருகிறார். இதையும் விரும்பாத பாலாஜி, ராஜபாளையத்துக்குப் பதிலாக பாஜக-வுக்கு விருதுநகர் தொகுதியை ஒதுக்கிவிட்டால் பாண்டியராஜன், கோபால்சாமி இருவருக்குமே சீட் கிடைக்காமல் செய்துவிடலாம் என கணக்குப் போடுகிறார்.
அதனால், மக்களவை தேர்தலில் உங்கள் மனைவி ராதிகாவை விருதுநகரில் நிறுத்தியது போல் இம்முறை விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் நீங்களே போட்டியிடுங்கள் என நடிகர் சரத்குமாரிடம் பாலாஜி பேசிவருவதாகச் சொல்கிறார்கள். ஆனால், விருதுநகரை பாண்டியராஜனுக்கும் ராஜபாளையத்தை கோபால்சாமிக்கும் ஒதுக்காவிட்டால் இரண்டு தொகுதிகளையுமே திமுக கூட்டணி தான் கைப்பற்றும் என்பதே கள நிலவரம்” என்றனர்.
இதனிடையே, பொதுவெளியில் ராஜேந்திர பாலாஜி மீண்டும் தன்னை அவமானப்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே மாஃபா பாண்டியராஜன் இபிஎஸ் பிரச்சாரப் பயணத்தில் கலந்துகொள்ளாமல் நாகரிகமாக தவிர்த்ததாகவும் ஒரு பேச்சு இருக்கிறது.
இது குறித்து மாஃபா பாண்டியராஜனிடம் கேட்டதற்கு, “எனது நிறுவனத்தின் அடுத்தகட்ட செயல்பாடுகள் தொடர்பாக மும்பையில் முக்கியமான பணியில் இருந்ததால் எடப்பாடியாரின் பிரச்சார பயணத்தில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. இதுகுறித்து அவரிடம் முன்கூட்டியே தெரிவித்துவிட்டேன். அவரும் தொழிலைக் கவனிக்கும்படி அறிவுரை சொன்னார். ஓரிரு வாரங்களில் விருதுநகர் திரும்பியதும் வழக்கம் போல் கட்சிப் பணிகளில் முழுமூச்சுடன் ஈடுபடுவேன்” என்றார்.
இம்முறை ராஜபாளையத்தில் போட்டியிடுவது உறுதிதானே என பாஜக துணை தலைவர் கோபால்சாமியிடம் கேட்டதற்கு, “எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். ராஜபாளையத்தில் நான் எம்எல்ஏ-வாக இருந்தபோது செய்துமுடித்த பணிகள் இன்னமும் மக்களிடையே பேசப்படுகிறது. கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்த பிறகு, ராஜபாளையத்தில் யார் போட்டியிடுவார் என்பதும் முடிவாகும்” என்றார்.
மாஃபா பாண்டியராஜனும் கோபால்சாமியும் தங்களது கட்சி தலைமைகள் உத்தரவாதம் அளித்த பிறகே விருதுநகரிலும் ராஜபாளையத்திலும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள். அப்படி இருக்கையில், ராஜேந்திர பாலாஜியின் ‘ரெண்டு மாங்காய்’ திட்டம் கைகூடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.