சென்னை: சென்னை பிராட்வேயில், ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம் அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, குறளகம் கட்டிடம் இடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னையில் பல்வேறு இடங்களில் ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம் அமைக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நவீன பேருந்து முனையம், வணிக வளாகம், வாகன நிறுத்தமிடங்கள், பொழுது போக்கு அம்சங்களுடன் இது இடம்பெற உள்ளது.
அந்த வகையில், பிராட்வேயில் உள்ள குறளகம் கட்டிடத்தை புதுப்பித்தல், பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம் அமைப்பதற்குமான ஒப்பந்தம் ரூ.566.59 கோடியில் பிரிட்ஜ் அண்ட் ரூஃப் நிறுவனத்துக்கு, சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் கடந்த மாதம் வழங்கியது.
இந்நிலையில், ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம் அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, பிராட்வேயில் உள்ள குறளகம் கட்டிடத்தை இடிக்கும் பணி கடந்த வாரம் தொடங்கியது. முதல் கட்டமாக, உள்பகுதியில் கட்டிடம் இடிக்கப்பட்டு வந்தது. இப்போது, வெளிப் பகுதியில் இடிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
4 மாடிகளை கொண்ட குறளகம் கட்டிடத்தில் காதி கிராஃப்ட், கதர் துறை உள்பட பல்வேறு துறைகளின் அலுவலகங்கள் இயங்கி வந்தன. இந்த துறை அலுவலகங்கள் தற்போது இடம் மாற்றப்பட்டன. புதுப்பிக்கப்படும் குறளகம் கட்டடம் மொத்தமாக 22,794 சதுர மீட்டர் கட்டிட பரப்பளவைக் கொண்டதாக இருக்கும். இதில், இரண்டு அடித்தள நிலைகள், தரைத்தளம் மற்றும் 9 மேல் தளங்கள் இடம்பெற உள்ளன.