2026-ல் தமிழகம் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் சூழலில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அரசியலுக்குப் புதிதாக வந்தவர்கள் கூட மாநாடு என்று மாஸ் காட்ட, எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரப் பயணம் எழுச்சிதான் என்றாலும் கூட, அதிமுகவில் அவ்வப்போது குழப்பம் தலைதூக்குகிறதே என்று அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் குமுறிக் கொண்டிருக்கின்றனர்.
முன்னாள் எம்பி அன்வர் ராஜா, முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான் உள்ளிட்டோர் திமுகவுக்கு தாவ, அது தொண்டர்களிடம் உற்சாகக் குறைவை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சாரப் பேரணியை கையிலெடுத்து எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்தார். இருப்பினும், மதுரை போன்ற சில மாவட்டங்களைத் தவிர்த்து, அதிமுகவும் பாஜகவும் தாமரை இலை நீர் போல் ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பது கட்சியினருக்கு அதிருப்தியாகவே தொடர்கிறது என்பது கள அரசியல் பார்வையாளர்களின் கணிப்பு.
இந்தச் சூழலில், அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், எம்ஜிஆர், ஜெயலலிதாவின் அபிமானம் பெற்றவருமான செங்கோட்டையன் இன்று கோபியில் ஒரு முக்கிய கருத்தை முன்வைத்துள்ளார். அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை அரவணைக்க வேண்டும், ஒன்றுபட்டு தேர்தலை எதிர்கொண்டால் மட்டுமே தமிழகத்தில் மீண்டும் ஆட்சி என்ற கனவு கைகூடும், அனைவரையும் ஒன்றிணைக்க 10 நாட்கள் அவகாசம் தருகிறேன் என்றெல்லாம் பேசியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இதே கருத்தை சசிகலாவும் முன்வைத்திருந்தார். “ஒன்றுபட்ட அதிமுகவாக போட்டியிட்டால் 2026-ல் வெற்றி நிச்சயம். வாருங்கள் வென்று காட்டுவோம்” என்று அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில், இன்றைய செங்கோட்டையனின் பேச்சு தெளிவாக சில சமிக்ஞைகளைக் கடத்தியுள்ளது. அதில் முதன்மையானது, எடப்பாடி பழனிசாமி அதிமுக கட்சியை தன்னுடைய விருப்பத்தின்படி நடத்தாமல் அதிமுகவின் கோடிக்கணக்கான தொண்டர்களின் மனநிலைக்கு ஏற்ப நடத்த வேண்டும்.அதற்கு கால அவகாசம் நிர்ணயித்திருப்பது, ‘பூனைக்கு யார் மணி கட்டுவது?’ என்று அதிமுக மூத்த முக்கியத் தலைவர்கள் பலரின் முயற்சிக்கும் பிடி கொடுக்காத இபிஎஸ்-க்கு ஒரு செக்.
இதுவரை அதிருப்தியாளர்கள் வெளியேறித்தான் இருக்கிறார்கள். இதில் செங்கோட்டையன் மட்டும்தான் 10 நாட்கள் அவகாசம் கொடுக்கிறேன். இல்லாவிட்டால், ஒன்றிணைப்பதற்கான முயற்சியை எடுப்பேன் என்று கூறியிருக்கிறார். அதன்பின்னர் என்ன நடவடிக்கை எடுப்பேன் என்பது சஸ்பென்ஸ் என்றும் கூறியுள்ளார்.
மேலும், செங்கோட்டையன் இன்று செய்தியாளர் சந்திப்பு நடத்துவதற்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடும், அவருக்காக திரண்ட கூட்டமும், தனக்கான ஆதரவை இபிஎஸ்-க்கு வெளிப்படுத்துவதற்கானது என்றும் கூறப்படுகிறது. அதற்காகவே எம்ஜிஆர், ஜெயலலிதா தன் மீது வைத்திருந்த நம்பிக்கை, கட்சிக்காக தான் செய்த தியாகங்கள் என்று அவர் பட்டியிலிட்டார் என்று கூறப்படுகிறது.
அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் தேர்தல் களம் சோபிக்காத நிலையில், செங்கோட்டையன் தலைமையில் அதிமுகவை இயங்கலாம் என்ற வாய்ப்பை உருவாக்கவே இந்த அறைகூவலும், கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்ற கருத்துகளையும அவரது ஆதரவாளர்கள் முன்வைக்கத் தொடங்கியிருக்கின்றனர். இதன் பின்னணியில் பாஜகவின் மறைமுக ஆதரவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது என்ற பேச்சுக்கு இடமே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி பலமுறை திட்டவட்டமாக கூறிவிட்டார். கட்சி ஒன்றிணைப்புக்காக முன்னாள் அமைச்சர்கள் 6 பேர் பலமுறை வலியுறுத்தியும் கேக்காத இபிஎஸ், செங்கோட்டையனின் கோரிக்கைக்கும், கெடுவுக்கும் வளைந்து கொடுக்க வாய்ப்பே இல்லை என்றே கூறப்படுகிறது.
தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே இருக்கும் நிலையில், அதிமுகவை ஒன்றிணைப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. இந்த குறுகிய காலத்தை கட்சி ஒன்றிணைப்பில் செலவழித்தால் அது தேர்தலில் பின்னடைவையே ஏற்படுத்தும். அதேவேளையில், அதிமுகவில் முன்பு இபிஎஸ் – ஓபிஎஸ்-க்கு நடந்த அதிகாரப் போட்டி போல், இபிஎஸ் – செங்கோட்டையன் போட்டி முழுவீச்சில் நடைபெறவும் வாய்ப்புள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
தேர்தலில் எதிர்க்கட்சிகள் சமாளிக்க வியூகம் வகுக்க வேண்டிய நேரத்தில், கட்சிக்குள் இபிஎஸ்-க்கு மிகப் பெரிய சவால் ஏற்பட்டுள்ளது. செங்கோட்டையன் பேச்சுக்கு ஓபிஎஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். செல்லூர் ராஜூ போன்ற சிலர் கருத்து சொல்ல மறுத்துள்ளனர். இந்தச் சூழலில் செங்கோட்டையன் விதித்த 10 நாட்கள் கெடு நிச்சயம் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், செங்கோட்டையனின் ஒன்றுபட்ட அதிமுக கோரிக்கை எடுபடுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.