தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் 3-ம் கட்ட கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை ரூ.8,428.50 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நிலத்தடி நீரில் காணப்படும் புளோரைடு தாக்கம் அந்த நீரை பருகுவோரின் உடலில் எலும்பு, பல் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இதனால் இரு மாவட்ட மக்களில் பலர் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வந்தனர். இந்நிலையில், புளோரைடு பாதிப்புக்கு தீர்வு காணும் நோக்கத்துடன் ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு குறைப்புத் திட்டம் (முதல் மற்றும் இரண்டாம் கட்டம்) கடந்த 2008-ம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதியால் தருமபுரியில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்பட்டது.
தொடர்ந்து, ஜப்பான் நாட்டு நிறுவன நிதி உதவியுடன் ரூ.1,928.80 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இதன் மூலம் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி, அரூர் நகராட்சிகள், 15 பேரூராட்சிகள், 10 ஒன்றியங்களில் உள்ள 6,758 ஊரகக் குடியிருப்புகளைச் சேர்ந்த 34.75 லட்சம் மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மேற்கண்ட பகுதி மக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவை உயர்த்தி வழங்கும் நோக்கத்துடன் ஒகேனக்கல் 3-ம் கட்ட குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் அறிவித்தார். தற்போது அந்த திட்டத்துக்கான ஒப்பந்தப் புள்ளி கோர அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்துக்கான நீர் ஒகேனக்கல் காவிரியாற்றில் தலைமையிடத்தில் இருந்து எடுக்கப்பட்டு யானைப்பள்ளம், கணவாய் நீருந்து நிலையம் ஆகியவற்றின் வழியாக 20.20 கி.மீ. தொலைவில் பருவதனஅள்ளி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்படும். இந்த நிலையத்தில் நாளொன்றுக்கு 242.50 மில்லியன் லிட்டர் நீர் சுத்திகரிக்கப்படும். பின்னர் அங்கு அமையவுள்ள சேமிப்புத் தொட்டியில் இருந்து குழாய்கள் வழியாக 32 அழுத்த விசைத் தொட்டிகள், 324 முதன்மை சமநிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், 598 தரைமட்ட தொட்டிகளில் நீர் சேமிக்கப்படும். அங்கிருந்து தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட நகர்ப்புற, ஊரக பகுதிகளில் உள்ள 1009 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு விநியோகம் செய்யப்பட உள்ளது.
ரூ.8,428.50 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்துக்கு ஊரக பகுதிகளுக்கான மத்திய அரசின் பங்களிப்புத் தொகை ரூ.2,283.40 கோடி, மாநில அரசின் மற்றும் தொழில்துறை பங்களிப்புத் தொகை ரூ.1,761 கோடி, ஊரக, நகர்ப்புற பகுதிகளுக்கான மாநில அரசின் பங்களிப்புத் தொகை ரூ.4,384.10 கோடி வெளிப்புற நிதியுதவி மூலம் நிதி பெற மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான துறையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு ஜப்பான் பன்னாட்டு உதவி பெறப்பட உள்ளது. இத்திட்டம் 11 தொகுப்புகளாக செயல்படுத்தப்பட உள்ளது.
முதல் கட்டமாக தொகுப்பு 2 எ மற்றும் திட்ட மேலாண்மை ஆலோசகருக்கான ஒப்பந்தப்புள்ளி கோர ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, மேற்கூறிய பகுதிகளில் உள்ள 6,802 ஊரக குடியிருப்புகளைச் சேர்ந்த 38.81 லட்சம் மக்களுக்கு போதுமான குடிநீர் வழங்கப்படும்.