சென்னை: போலி பாஸ்போர்ட் வழக்கில், குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, ஐபிஎஸ் அதிகாரி டேவிட்சன் தேவாசிர்வாதம் மீது விசாரணை நடத்தக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
மதுரை மாநகர காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசிர்வாதம் பதவி வகித்த காலத்தில், 200-க்கும் மேற்பட்டோருக்கு போலி ஆவணங்களின் அடிப்படையில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டதாகவும், இது சம்பந்தமாக ஐபிஎஸ் அதிகாரி டேவிட் சன் தேவாசிர்வாதத்துக்கு எதிரான புகார் குறித்து ஆரம்பக் கட்ட விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என சென்னையைச் சேர்ந்த வாராகி என்பவர் 2023-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜேந்திரன் ஆஜராகி வாதிட்டார். இந்த விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரி டேவிட்சனுக்கு தொடர்பில்லை எனக் கூறி, நற்சான்று அளித்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளதாகவும், மனுதாரரின் கோரிக்கை மனு மிது ஆரம்பக் கட்ட விசாரணை நடத்தப்பட்டு, புகாரில் முகாந்திரம் இல்லை என முடிவுக்கு வந்ததாகவும், அந்த விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவின் அடிப்படையில், ஐந்து காவல் துறையினர் உள்பட 59 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கு குற்றச்சாட்டுக்கள் பதிவுக்காக தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை, இரு நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்துள்ள நிலையில், போலி பாஸ்போர்ட் மோசடி தொடராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை எனக் கூறி, வாராகி தாக்கல் செய்த பொதுநல வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.