சென்னை: திருநெல்வேலியில் ஐடி ஊழியர் சாதிய படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாளையங்கோட்டையில் ஐடி ஊழியர்கவின் சாதிய படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து விசிக தலைவர் திருமாவளவன் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த கொடூர சாதிய கொலைக்கு உடந்தையாக இருந்த பெண்ணின் பெற்றோரை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவர்களை காவல் துறை பணியிலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும்.
மேலும் இவ்வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்ற வேண்டும். ஆதிக்க சாதிவெறியாட்டத்தைத் தடுப்பதற்கு காவல் துறையில் ஒரு தனி நுண்ணறிவுப் பிரிவை உருவாக்க வேண்டும் என்னும் கோரிக்கையை மீண்டும் மீண்டும் முன்வைக்கிறோம். சாதிய கொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை இந்திய சட்ட ஆணையம் வடிவமைத்து பல ஆண்டுகளாகியும் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.
சாதிய கொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக மாநில அரசு உருவாக்க வேண்டும். கவினை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி விடுத்த அறிக்கையில், “இச்சம்பவத்துக்கு காரணம் மேலாதிக்க சாதித் திமிரைத் தவிர வேறெதுவும் இல்லை. சம்பந்தப்பட்ட பெண் உட்பட ஒட்டுமொத்த குடும்பத்தினரும் கைது செய்யப்பட்டு, ஒரு மாதத்துக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும் வகையில் வழக்கை விரைவுபடுத்த வேண்டும்.
இக்கொடூரப் படுகொலையைக் கண்டித்து, புதிய தமிழகம் கட்சி சார்பில், திருநெல்வேலி ரயில் சந்திப்பில் நாளை (ஜூலை 31) காலை 11.30 மணிக்கு மாநில இளைஞரணித் தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.