திருநெல்வேலி: திருநெல்வேலியில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) கொலை வழக்கு தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் வரும் 5-ம் தேதி நேரில் விசாரணை மேற்கொள்ள இருக்கிறது. இதனிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது மகனை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் கடந்த 27-ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இவர் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவரை பாளையங்கோட்டை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது பெற்றோரான தமிழ்நாடு சிறப்பு காவல்படை சப்-இன்ஸ்பெக்டர்களான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தநிலையில், இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் இருவரையும் கைது செய்தால் மட்டுமே கவின் செல்வகணேஷின் உடலை வாங்கி அடக்கம் செய்வோம் என உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணனை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து 5 நாட்களுக்குப்பின் கவின் செல்வகணேஷ் உடலை அவரது உறவினர்கள் நேற்று பெற்றுக்கொண்டனர். பின்னர் அவரது சொந்த ஊரில் உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டிருந்த நிலையில் சிபிசிஐடி போலீஸார் வழக்கு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், அவரது மகன் சுர்ஜித் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் வரும் 5-ம் தேதி நேரில் விசாரணை மேற்கொள்ள இருக்கிறது. இதற்காக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா தலைமையிலான சிறப்பு குழுவினர் அன்று திருநெல்வேலிக்கு வருகிறார்கள். அவர்கள் பாளையங்கோட்டை கேடிசி நகரில் கவின் செல்வகணேஷ் கொலை செய்யப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்துகிறார்கள். மேலும் மாவட்ட அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொள்கிறார்கள். இது தொடர்பாக உயர் அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டத்திலும் பங்கேற்கிறார்கள்.