ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துக்கு ஆள் சேர்த்த வழக்கில் முக்கிய குற்றவாளி மீது பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த விவகாரம் தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் மயிலாடுதுறையில் 15, சென்னையில் 5 இடங்கள் என தமிழகத்தில் 20 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர்.
சென்னை புரசை வாக்கம் அழகப்பா சாலையில் இயங்கி வரும் தனியார் ஆம்புலன்ஸ் சர்வீஸ் நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அங்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணி செய்து வந்த மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் பகுதியைச் சேர்ந்த அல்பாசித் (26) என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அல்பாசித் மற்றும் அவரது கூட்டாளிகள் தமிழகத்தில் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய இளைஞர்களை குறிவைத்து, சமூக ஊடகங்கள் மூலம் ஐஎஸ்ஐஎஸ் தொடர்பான வீடியோக்கள், ஆவணங்கள் மற்றும் படங்களை பரப்பி வந்தது தெரியவந்தது. மேலும், தமிழகத்தில் பல பயங்கரவாத வழக்குகளில் தொடர்புடைய முகமது ஆஷிக் மற்றும் சாதிக் பாட்ஷா உள்ளிட்ட தீவிரவாத இஸ்லாமியர்கள் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தீவிர ஆதரவாளர்களுடன் அல்பாசித் நெருங்கிய தொடர்பில் இருந்ததும் விசாரணையில் தெரிந்தது.
வாட்ஸ் அப், டெலி கிராமில் போன்ற பல்வேறு குழுக்களை உருவாக்கி, அதன் மூலம் நாட்டின் ஒற்றுமை, பாதுகாப்பு மற்றும் வகுப்புவாத நல்லிணக்க த்தை அச்சுறுத்தும் சட்டவிரோத நடவடிக்கைகளை அவர் ஊக்குவித்து வந்ததையும், ஐஎஸ்ஐஎஸ் சித்தாந்தத்தை இளைஞர்களிடையே பரப்பி வந்ததையும் விசாரணையில் என்ஐஏ அதிகாரிகள் கண்டறிந்தனர். இந்நிலையில் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அல்பாசித் மீது என்ஐஏ அதிகாரிகள் நேற்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.