ஏலகிரி: “தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஏலகிரியில் பழுதடைந்த அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும். அம்மா மினி கிளினிக் இங்கு திறக்கப்படும்” என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மலைவாழ் மக்களிடம் வாக்குறுதி அளித்தார்.
அதிமுக சார்பில் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார பேரணியை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் தொடங்கி சட்டப்பேரவை தொகுதி வாரியாக மக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தும், மனுக்களாக பெற்று பொதுமக்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார்.
அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளில் 3 தொகுதிகளில் நேற்று பரப்புரை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி இன்று காலை ஏலகிரி மலைக்கு சென்றார். அங்கு கொட்டாவூர் மலைப்பகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு மலைவாழ் மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அவர்களுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடல் நடத்தினார். இதனைத் தொடர்ந்து திறந்த வேனில் எடப்பாடி பழனிசாமி பேசியது: ‘‘ஏலகிரி மலையில் வசித்து வரும் மலைவாழ் மக்களை சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது.
ஏலகிரி மலையை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள பிரபலமான சுற்றுலா தளங்களில் ஒன்றாகும். இந்த பகுதியை மேலும் வளர அதிமுக அரசு மீண்டும் உங்களால் தேர்ந்தெடுக்கும்போது இந்த ஏலகிரி மலையானது மிகச் சிறந்த சுற்றுலா தளமாக உருவாக்கவும், இங்கு அனைத்து வசதிகளுடன் கூடிய பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைய சுற்றுலா தளமாக ஏலகிரி உருவாக்கப்படும்.
ஏலகிரி மலையில் மக்களை சந்தித்து கலந்துரையாடியபோது இந்தப் பகுதியில் சில கோரிக்கைகள் மலைவாழ் மக்கள் என்னிடம் முன் வைத்துள்ளனர். ஏலகிரி மலை ஊராட்சியில் 14 குக்கிராமங்களில் பல இடங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலைகள் தற்போது சிதலமடைந்து குண்டும், குழியுமாக இருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினர்.
அதிமுக ஆட்சி வந்த பிறகு ஏலகிரி மலையில் பழுதடைந்த அனைத்து சாலைகளும் புதிய தார்ச்சாலையாக மாற்றப்படும். மலைவாழ் மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றி தரப்படும். அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டது. அதை திமுக அரசு மூடியது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்த உடன் மாநிலம் முழுவதும் 4 ஆயிரம் அம்மா மினி கிளினிக் திறப்படும். அதில் ஏலகிரி மலையிலும் அம்மா மினி கிளினிக் திறக்கப்படும்.
அதிமுக ஆட்சியில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு கொண்டு வந்து, அதன் மூலமாக அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மருத்துவக் கல்லுாரியில் படிக்கும் வாய்ப்பை உருவாக்கித் தந்தோம். இங்கு மலைவாழ் மக்கள் அதிகம் வாழ்கின்ற பகுதியாக இருப்பதால், இந்த கிராமத்தில் இருக்கின்ற மாணவர்களுக்கு தகுந்த பயிற்சி அளித்து அவங்களுக்கும் இந்த இட ஒதுக்கீடு மூலமாக மருத்துவக் கல்லுாரியில் படிப்பதற்கு அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கும். மேலும், மலை கிராமங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்படும்.
அதிமுக அரசைப் பொறுத்தவரை ஏழை, எளிய மக்களுக்கு ஏற்றம் வரவேண்டும். அவர்களது வாழ்வில் ஒளி வீச வேண்டும் என்பது லட்சியமாக கொண்டுள்ளது. ஏழை மக்களுக்கு தேவையான திட்டங்கள் கொண்டு வந்து அதன் மூலமாக அவர்களின் பொருளாதாரம் மேம்பாடு அடைய வேண்டும் என்ற அடிப்படையில்தான் பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
குறிப்பாக, ஏழை மக்கள் பலருக்கு வீடு இல்லாமல் இருக்கிறது. சிலருக்கு வீட்டுமனை இல்லாமல் உள்ளது. அத்தகைய மக்களை கண்டறிந்து அவர்களுக்கு கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்க அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கும். இது மட்டும் இல்லாமல் கூட்டுறவு சங்கத்தின் மூலமாக அவர்களுக்கு தேவையான நிதி உதவிகள் வழங்கி சுய உதவிக் குழுக்கள் மூலமாக மலைவாழ் மக்கள் தொழில் தொடங்குவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விலைவாசியை கட்டுப்பாட்டுக்குள் வைக்க அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கும்’’ என்று பழனிச்சாமி பேசினார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, எம்.பி. தம்பிதுரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.