டிஜிபி அலுவலகம் அருகே புரட்சி தமிழகம் கட்சி தலைவரான ‘ஏர்போர்ட்’ மூர்த்தியை விசிகவினர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஆடுதுறை பேரூராட்சி தலைவராக ம.க.ஸ்டாலின் என்பவர் உள்ளார். பாமக வடக்கு மாவட்டச் செயலாளராகவும், வன்னியர் சங்க மாநில துணை பொதுச் செயலாளராகவும் உள்ளார்.
இவர், நேற்று முன்தினம் காலை அவரது ஆதரவாளர்களுடன் பேரூராட்சி அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு காரில் வந்த 8 பேர் கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து தாக்குதல் நடத்தியது. மேலும், நாட்டு வெடி குண்டுகளையும் வீசியது. இதில் 2 பேர் காயம் அடைந்த நிலையில் ம.க.ஸ்டாலின் உயிர் தப்பினார். தாக்குதல் நடத்தி தப்பிய கும்பலை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இந்நிலையில், ‘ம.க.ஸ்டாலின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் விவகாரத்தில் டிஜிபி நேரடியாக தலையிட்டு இச்சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும். ம.க. ஸ்டாலினுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என, சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏவும், பாமக மாநில இணைப்பொதுச் செயலாளருமான அருள், டிஜிபி அலுவலகத்தில் நேற்று காலை புகார் மனு அளித்தார்.
முன்னதாக அவரைப் பார்ப்பதற்காக புரட்சி தமிழகம் கட்சி தலைவரான ‘ஏர்போர்ட்’ மூர்த்தி, டிஜிபி அலுவலக வாசலில் காத்திருந்தார். அப்போது அங்கு திடீரென வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிலர், ‘ஏர்போர்ட்’ மூர்த்தியிடம் தகராறு செய்தனர். திடீரென அவரை விரட்டித் தாக்கினர்.
இதில் நிலைகுலைந்த அவர், சிறிது நேரத்தில் சுதாரித்துக் கொண்டு பதில் தாக்குதல் நடத்த முயன்றார். இதையடுத்து, விசிகவினர் தப்பி ஓடினர். போலீஸார் முன்னிலையிலேயே நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக ‘ஏர்போர்ட்’ மூர்த்தி கூறும்போது, ”விசிகவைச் சேர்ந்த கூலிப்படையினர் 8 பேர் திருமாவளவன் தூண்டுதலின் பேரில் தாக்குதல் நடத்தினர். நான் என்னை தற்காத்துக் கொண்டேன். திருமாவளவனின் பட்டியலின சமூக விரோதப் போக்கை நான் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறேன். திருமாவளவன் என்னை கொலை செய்ய முயற்சிக்கிறார் என்று 2 முறை போலீஸில் புகார் அளித்தேன். அதற்கு போலீஸார், ‘நிலைமை சரியில்லை, நீங்கள் பார்த்து இருந்துக்கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டனர்.
காவல்துறைக்கும், அரசுக்கும் தெரிந்தே என் மீது தாக்குதல் நடந்துள்ளது. அரசியல் ரீதியில் பட்டியல் சமூக மக்களுக்கு துளியும் உதவாத திருமாவளவன் செயல்களை தொடர்ந்து விமர்சித்துக் கொண்டே இருப்பேன்” என்றார்.