தொண்டர்களை தேர்தல் களத்துக்கு தயார்படுத்தும் அதேசமயத்தில், புகார்களில் சிக்கும் கட்சிப் நிர்வாகிகளை தேர்தல் சமயம் என்றுகூட பாராமல் களையெடுத்தும் வருகிறது திமுக தலைமை. அந்த விதத்தில் தான் கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்.
கார்த்திக் நீக்கப்பட்டதன் பின்னணி குறித்து நம்மிடம் பேசிய கோவை மாநகர் மாவட்ட திமுக நிர்வாகிகள், “கோவை மாவட்டம் அதிமுக கோட்டை என்ற இமேஜை உடைக்கவே செந்தில் பாலாஜியை கோவைக்கு அனுப்பி வைத்தது தலைமை. அப்படி கோவைக்கு வந்த அவர், மைக்ரோ லெவலில் கட்சியினரின் நடவடிக்கைகளை கண்காணித்து களையெடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறார். அவர் கோவைக்கு பொறுப்பேற்ற பிறகு நடந்த தேர்தல்களில் திமுக வெற்றிமுகமே கண்டிருப்பதால் அவர் சொல்வதை தலைமையும் தட்டாமல் ஏற்றுக் கொள்கிறது.
செந்தில் பாலாஜிக்கும் கார்த்திக்கிற்கும் தொடக்கம் முதலே ஒத்துப் போகவில்லை. அதனால் எப்படியும் தனது தலைக்கு கத்தி வரும் என்பதை உணர்ந்தே இருந்த கார்த்திக், செந்தில் பாலாஜியின் விசுவாசிகளுக்கு முக்கிய பொறுப்புகள் வாய்க்காமல் பார்த்துக் கொண்டார். இதனிடையே, கார்த்திக் தனது மனைவியை கோவை மேயராக கொண்டுவர தீவிர முயற்சி எடுத்தார். ஆனால், செந்தில் பாலாஜி அதை தந்திரமாகத் தடுத்துவிட்டார். அடுத்ததாக எம்பி தேர்தலில் போட்டியிடவும் கார்த்திக் ரெடியானார். செந்தில் பாலாஜி அதையும் தடுத்து தனது விசுவாசியான கணபதி ராஜ்குமாரை எம்பி-யாக்கினார். அதேசமயம் தனக்கு சீட் கிடைக்காத ஆதங்கத்தில் இருந்ததால் கார்த்திக்கின் சொந்த பூத்திலேயே அண்ணாமலை கூடுதல் வாக்குகளைப் பெற்றதும் நடந்தது.
செந்தில்பாலாஜி சிபாரிசில் எம்பி ஆனவர் என்பதால் கணபதி ராஜ்குமாருடனும் கார்த்திக்கின் ஆதரவாளர்கள் ஒட்டாமல் நின்றார்கள். போஸ்டர்கள், விளம்பரங்களில் எம்பி-யின் படத்தைப் போடவிடாமல் கட்சியினர் தடுக்கப்பட்டார்கள். செந்தில்பாலாஜி சிறைசென்றதும், அவர் இனி கோவை பக்கம் வரவேமாட்டார் என முடிவே செய்துவிட்ட கார்த்திக்கின் ஆதரவாளர்கள், அப்படியே பிடிமானத்தை அமைச்சர் எ.வ.வேலு பக்கம் மாற்றிக் கொண்டார்கள். ஆனால், அவர்களின் கணிப்பு தவறாகி பாலாஜி மீண்டும் கோவைக்கு திரும்பினார்.
இதனிடையே, பணம் வாங்கிக் கொண்டு கட்சிப் பொறுப்புகளை வழங்குவதாக புகார்கள் பறந்ததால் கோவை மாநகர் மாவட்ட திமுக-வில் சிலருக்கு பரிந்துரைக்கப்பட்ட பதவிகளுக்கு தலைமை ஒப்புதல் அளிக்கவில்லை. கோவை திமுக என்றால் அதில் தான் மட்டுமே பிரதானம் என காட்டிக்கொண்ட கார்த்திக், கட்சி நலனைவிட தன்னை வளப்படுத்திக் கொள்வதிலேயே குறியாய் இருந்தார். இதனிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் மறைமுக டீலில் இருப்பதாகவும் கோவை திமுக-வினர் சிலர் மீது தலைமைக்கு புகார்கள் பறந்தன. போதாதுக்கு, திமுக-வின் பவர் சென்டர்கள் குறித்து விமர்சனம் செய்து கார்த்திக் பேசியதாக ஆடியோ ஒன்றும் வெளியாகி அவருக்கு நெருக்கடியை அதிகரித்தது.
கார்த்திக் தனது மாமனார் வீட்டில் கார் நிறுத்துவதற்கு இடைஞ்சலாக இருக்கும் என்பதால் விளையாட்டு மைதானத்துக்கு சுவர் எழுப்ப விடாமல் தடுப்பதாக சிங்காநல்லூர் அதிமுக எம்எல்ஏ-வான ஜெயராம் புகார் தெரிவித்ததும் பிரளயமானது. கார்த்திக்கிற்கு இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்பட்ட போதெல்லாம் அமைச்சர் எ.வ. வேலு கரம்கொடுத்து காப்பாற்றி இருக்கிறார். ஆனால், இம்முறை அவராலும் காப்பாற்ற முடியாமல் கைமீறிப் போய்விட்டது. கார்த்திக்கை கட்டம் கட்டிய செந்தில்பாலாஜி, அவரது இடத்தில் தனது விசுவாசியும் கார்த்திக்கின் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவருமான துரை.செந்தமிழ்ச்செல்வனை உட்காரவைத்துவிட்டார்” என்றனர்.
கார்த்திக்கின் ஆதரவாளர்களோ, “எங்கு சென்றாலும் அங்குள்ள கட்சி நிர்வாகிகளை மாற்றிவிட்டு அந்த இடத்தில் தனது விசுவாசிகளை அமர்த்துவது தான் செந்தில்பாலாஜி ஸ்டைல். ஐந்தாக இருந்த கோவை மாவட்ட திமுக 3 மாவட்டமாக சுருக்கப்பட்ட போதே மற்ற இரண்டு மாவட்டங்களுக்கு தனது விசுவாசிகளை செயலாளராக கொண்டு வந்த பாலாஜி, அப்போதே கார்த்திக்கையும் மாற்ற நினைத்தார். ஆனால், முடியவில்லை. அதனால் சந்தர்ப்பத்துக்கு காத்திருந்து இப்போது மாற்றிவிட்டார். என்னதான் சொன்னாலும் கடந்த அதிமுக ஆட்சியில் கோவை மாவட்டத்திலேயே ஒரே ஒரு திமுக எம்எல்ஏ-வாக இருந்து பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்பட்டவர் கார்த்திக் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்” என்கிறார்கள்.
இதுகுறித்து கார்த்திக்கிடம் பேசினோம். “திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது கட்சிக்காக போராடியதற்காக சுமார் 40 வழக்குகள் என் மீது உள்ளன. அதிமுக-வையும், எஸ்.பி.வேலுமணியையும் எதிர்த்து தீவிர அரசியல் செய்து வந்தேன். தலைமை அறிவித்த அனைத்துப் போராட்டங்களையும் நடத்தி இருக்கிறேன். எனவே, எனது மாற்றம் என்பது வழக்கமான ஒன்று தான். இதற்கு வேறெந்த பின்னணியும் இல்லை. இருந்தும், காழ்புணர்ச்சியின் காரணமாக எனது அரசியல் எதிரிகள் எனக்கு எதிரான அவதூறு குற்றச்சாட்டு களை பரப்பி வருகின்றனர். மாநில தீர்மானக் குழு செயலாளர் என்ற உயர்வான பதவியை எனக்குத் தந்துவிட்டுத்தான் மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து என்னை விடுவித்திருக்கிறது தலைமை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் அவர்.
அமைச்சர் எ.வ.வேலுவின் விசுவாசியாக காட்டிக்கொண்ட கார்த்திக் மாற்றப்பட்ட விவகாரமானது செந்தில்பாலாஜிக்கு வேறு விதமாக சிக்கலை உண்டாக்கினாலும் ஆச்சரியமில்லை என்றும் கிசுகிசுக்கிறார்கள் கோவை திமுக வட்டாரத்தில்.