சென்னை: எவ்வளவு மது குடிக்கலாம் என்பதை மதுபாட்டிலில் குறிப்பிடக்கோரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ தாக்கல் செய்திருந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வான வால்பாறை ஏ.தரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில். ‘‘மதுவால் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துவிட்ட நிலையில் டாஸ்மாக் மதுபானக்கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதாகக்கூறிய தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குடும்ப வன்முறை சம்பவங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் சம்பவங்களுக்கு மதுவே முக்கியமான காரணம். எனவே எவ்வளவு மது குடிக்கலாம் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அதுகுறித்து மதுபாட்டில்களில் குறிப்பிடவும், மதுபான விற்பனையை வெகுவாக குறைக்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும், எனக்கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எம்.எம். வஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான மாநில அரசு ப்ளீடர் ஏ.எட்வின் பிரபாகர் இதுதொடர்பாக மனுதாரர் அளித்த கோரிக்கை மனுவுக்கு பதிலளிக்கப்பட்டுவிட்டது.
மது அருந்துதல் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என ஏற்கெனவே மதுபாட்டிலில் விழிப்புணர்வு வாசகம் உள்ளது. தவிர திரையரங்குகளிலும் விழிப்புணர்வு வாசகங்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், மதுபாட்டிலிலேயே மது உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் எனக் குறிப்பிட்டுள்ள நிலையில், எவ்வளவு மது குடிக்கலாம் என பாட்டிலில் குறிப்பிடும்படி நீதிமன்றம் உத்தரவிட முடியாது.
மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைப்பது என்பது கொள்கை முடிவு என்பதால், அது தொடர்பாக அரசுதான் முடிவெடுக்க முடியும், எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.